கொழும்பில் கொவிட் தொற்றாளர்களில் 30 சதவீதமானோருக்கு டெல்டா திரிபு தொற்று!

கொழும்பு மாவட்டத்தில் பதிவான கொவிட் தொற்றாளர்களில் 20 தொடக்கம் 30 சதவீதமானோர் டெல்டா திரிபு தொற்றாளர்களாக இருக்க வாய்ப்புள்ளது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட வைரஸ் மாதிரிகளை பரிசோதித்ததன் மூலம் இது தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.

கொழும்பில் சேகரிக்கப்படும் 10 மாதிரிகளில் இரண்டு அல்லது மூன்று பேர் டெல்டா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததால் அது 30% என்று குறிப்பிடலாம் என கூறிய அவர், கொழும்பு பகுதியில் 20 முதல் 30 சதவீதம் பேர் வரை இருக்கலாம் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, காலி, மாத்தறை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் ஏனைய பகுதிகளில் இந்த வைரஸ் இல்லை என கூற முடியாது என்றும் தெரிவித்தார்.