Wednesday, May 12, 2021

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலில் கேரள பெண் பலி!

 


இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா வழிபாட்டு தலத்தில் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.

 
இதற்கு இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டிடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது.காசா டவர் என்று அழைக்கப்படும் அந்த கட்டிடம் காசா அமைப்பின் அரசியல் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 
தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக அந்த கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு 130 ராக்கெட்டுகளை ஏவியது.

 
இந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவை இஸ்ரேலிய ஏவுகணை தடுப்பு அமைப்பால் தடுக்கப்பட்டது.ஆனால் சில ஏவுகணைகள் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற நகரங்களில் விழுந்தன.இதில் பேருந்து,வாகனங்கள்,கட்டிடங்கள் தீக்கிரையானது.ஆனாலும், ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.

 
உயிரிழந்தவர்களில் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பெண்ணும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கஞ்ச்குஷி பஞ்சாயத்தை சேர்ந்தவர் 31 வயது நிரம்பிய சௌமியா.சௌமியா இஸ்ரவேலின் அஷ்கிலான் நகரில் பணியாற்றி வந்தார்.

 
இவர் நேற்று இரவு அஸ்கிலான் நகரில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து கேரளாவில் உள்ள தனது கணவரிடம் தொலைபேசியில் வீடியோகோல் மூலம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் ஒரு ரொக்கெட் சௌமியா தங்கியிருந்த வீட்டின் மீது விழுந்து வெடித்தது. இந்த தாக்குதலில் சௌமியா படுகாயம் அடைந்தார். வீடியோ கோல் பேசிக் கொண்டிருந்த அவரது கணவர் சந்தோஷ்க்கு சௌமியாவின் அலறல் சத்தம் கேட்டு பின்னர் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

 
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அஸ்கிலான் நகரில் பணியாற்றி வந்த சௌமியாவின் உறவினர் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு உடனடியாக சென்று பார்த்துள்ளனர்.அங்கு ஏவுகணை தாக்குதலில் கட்டிடம் இடிந்து விழுந்து சௌமியா உயிரிழந்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ளனர்.

 
10 ஆண்டுகளாக இஸ்ரலில் கேர் கவ்வராக பணியாற்றி வந்த சௌமியாவுக்கு 10 வயதில் மகன் உள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவிற்கு வந்து குடும்பத்தினரை சந்தித்து விட்டு இஸ்ரேல் சென்ற சௌமியா,வரும் ஜூலை மாதம் மீண்டும் சொந்த ஊரான கேரளாவிற்கு வர திட்டமிட்டிருந்தார்.ஹமாஸ் தாக்குதலில் சௌமியா உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்நிலையில் ஹமாஸ் தாக்குதலில் இந்தியர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!