Monday, May 10, 2021

நாட்டை மூடி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 20,000 ரூபாய் வழங்குங்கள்!

நாட்டை மூன்று வாரம் மூடி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 20,000 ரூபா வழங்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் இதுவரை ஆறு நாடுகளில் உள்ள கொரோனா கிருமிகள் இங்கே வந்து சேர்ந்துள்ளன.ஆகவே இன்று கர்ப்பிணித் தாய்மார்களும் பச்சை பாலகர்களும் சாகிறார்கள்.வொஷிங்டன்  பல்கலைக்கழகத்தின் I.H.M.E நிறுவனத்தின் இலங்கை பற்றிய ஆய்வில் இப்படியே போனால் இலங்கையில் செப்டம்பர் மாதமளவில் 20,000 பேர் வரை மரணிக்கவும் தினசரி மரணம் 200ஐக் கடக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆகவே துறைமுக நகருக்கு தரும் முன்னுரிமையை கொரோனா அழிப்புக்கு கொடுங்கள், இல்லாவிட்டால் உங்கள் தேரர் முருத்தெடுகல ஆனந்த பிக்கு சொல்வதைப் போன்று நாட்டில் மக்கள் தெருக்களில் செத்து மடியும் நிலைமை ஏற்படலாம்.

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த முன்னணி பிக்கு முருத்தெடுகல ஆனந்த தேரர், "நாட்டில் வீதியில் விழுந்து மரணிக்க மட்டுமே மக்களுக்கு இன்று உரிமை உள்ளது"என கூறுகிறார்.இந்த அரசை ஆட்சிக்கு கொண்டு வந்ததால் இவரும் இந் நிலைமைக்கு பொறுப்புக்கூற வேண்டும்.எனினும் இதைவிட இந்த ஆட்சியின் இலட்சணத்துக்கு சான்றிதழ் வேண்டுமா?

ஆரம்பத்தில் கொரோனாவால் வயதானவர்கள் மட்டுமே சாவார்கள் என கூறப்பட்டது.இன்று கர்ப்பிணிகள் சாகிறார்கள். குழந்தைகள் சாகிறார்கள். ஏனென்றால் இன்று நாட்டில் உள்ள கொரோனா கிருமியின் வீரியம் அதிகரித்துவிட்டது.

இன்று எமது நாட்டில் சீனா,தென்னாப்பிரிக்கா, நைஜீரியா,டென்மார்க்,இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வளர்ச்சியடைந்த கொரோனா கிருமிகள் உள்ளன. இவை எப்படி இலங்கைக்கு வந்தன? அரசின் கையாள் உதயாங்க வீரதுங்க கூட்டி வந்த உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள் தான் தம்முடன் இங்கிலாந்து கிருமிகளையும் கொண்டு வந்தார்கள். இப்படித்தான் எல்லாம் வந்தன.நீங்கள் உரிய வேளையில் விமான நிலையங்களை மூட மறுக்கிறீர்கள்.

இன்று நாட்டில் ஒரு நாளைக்கு 2600 நோயாளிகள்.நேற்று 22 பேர் இறந்தார்கள்.இவை கணக்கில் எடுக்கப்பட்டவை மட்டுமே இவற்றை தவிர இன்னும் உள்ளனவா என தேடிப் பார்க்க வேண்டும்.

நாட்டை மூட நீங்கள் மறுப்பது ஏன்? இரண்டு காரணங்கள் உள்ளன ஒன்று துறைமுக நகர சட்டமூலத்தை சபையில் "பாஸ்" செய்துகொள்ள பார்க்கிறீர்கள். அது தான் தேவை என்றால் நாட்டை மூடி பாராளுமன்றத்தை மாத்திரம் திறந்து வையுங்கள்.

அடுத்தது உங்களால் நாட்டை மூடிவிட்டு மக்களுக்கு நிவாரண தொகை வழங்க முடியவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூபாய் 20000 வழங்க வேண்டும். பணம் இல்லை.ஆனால் சீனி வரி குறைப்பால் திறைசேரிக்கு வராத நிதி உண்மையில் எங்கே போனது? அந்த தொகை ரூபாய் 1600 கோடி. அதில் எத்தனை குடும்பங்களுக்கு ரூபாய் 20,000 வழங்கலாம்?

நாட்டை மூடினால் நாளாந்த சம்பளம் பெறுவோர்,சுய தொழில் செய்வோர் என எத்தனை குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கணக்கிடுங்கள். எப்படியோ எல்லாம் அபிவிருத்தி திட்டங்கள்,புதிய வீதிகள்,புதிய உடற்பயிற்சி ஜிம்கள் ஆகியவற்றை இடைநிறுத்தி விட்டு ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 20000 வழங்குங்கள்.

கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவிக்கு வந்தவுடன் அவர் இந்திய பிரதமர் மோடியின் வழியில் போகிறார் என்று சொல்லப்பட்டது. இப்போது பார்த்தால் அது சரி போல் தெரிகிறது.

பிரதமர் மோடி அவரது குஜராத் ஊரில் ஸ்டேடியம் கட்டி அங்கே 125,000 பேரைக் கூட்டி இந்திய - இங்கிலாந்து கிரிக்கெட் மேளா நடத்தினார்.உத்தரகாண்டில் 90 லட்சம் பேரை கூட்டி கும்பமேளா என்ற மத விழாவை நடத்தினார்.5 மாநிலங்களில் தேர்தல் மேளா நடத்தினார்.அப்போது ஒரு நாளைக்கு இந்தியாவில் 20 ஆயிரம் பேர்தான் கொரோனா நோயாளிகளாக இருந்தார்கள். இவருக்கு பிறகு இப்போது அது ஒரு நாளைக்கு நான்கு லட்சத்தை தாண்டிவிட்டது.இறப்பும் கூடிவிட்டது.

அதுபோல நமது ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இப்போது குட்டி மோடி ஆகிவிட்டார். கோத்தபய ராஜபக்ஷ நரேந்திரமோடியின் பெரியதம்பி என்றால்,கோதாவின் சிஷ்யபிள்ளை  கெஸ்பாவையின் காமினி லொகுகே சின்னதம்பி ஆகியுள்ளார்.என கூறியுள்ளார்.


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!