Friday, April 2, 2021

பயத்தால் அல்ல,நீதிமன்ற தீர்ப்பு வரும்வரையே நாம் பொறுமை காக்கின்றோம்.

 


பயத்தால் அல்ல நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையே நாம் பொறுமை காக்கின்றோம்.நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் அமையும் என நம்புகின்றோம்.எது எப்படி இருந்தாலும் ஆயிரம் ரூபாவை எப்படி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் அமைந்துள்ள சி.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று(02)  நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் குறை நிறைகளை கண்டறிவதற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி நிகழ்வு நடைபெற்ற பின்னர் 1000 ரூபா சம்பள உயர்வு மற்றும் கம்பெனிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் ஜுவன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

50 ரூபாய் 100 ரூபாய் என கூறிக்கொண்டு கடந்த ஆட்சியின்போது ஐந்து வருடங்கள் கடத்தப்பட்டன.அதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை.ஆனால் இன்று கம்பெனிகளுக்கு எதிராக நாம் நீதிமன்றம் வரை சென்றுள்ளோம்.

இந்நிலையில் தொழிலாளர்களை தூண்டிவிட சிலர் முயற்சிக்கின்றனர். அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. அப்படி இருக்கையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியாவது ஏன் சம்பள உயர்வை வழங்க முடியாது எனவும் கேட்கின்றனர்.எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் செய்து விட முடியாது அதற்கென நடைமுறைகள் உள்ளன.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக தான் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு எதிராக மேல் முறையீடு செய்யும் உரிமையும் நீதிமன்றம் செல்லும் உரிமையும் கம்பெனிகளுக்கு இருக்கின்றன.ஆனால் 5ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.

தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக் கொடுத்துள்ளோம்.பெற்றுக் கொடுத்து வருகின்றோம்.மற்றைய தரப்பினரும் தொழிற்சங்கம் நடத்துகின்றனர்.அவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதையே பணியாக முன்னெடுக்கின்றனர்.நாம் பொறுமையாக இருக்கின்றோம். அதற்கு பயம் காரணமல்ல நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்கின்றோம்.

சிலவேளை நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் அடுத்து என்ன செய்வது என்பதும் தெரியும். பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும்.இது தொடர்பில் தொழில் அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என கூறினார்.

இதேவேளை ஊவாவில் தமிழ் கல்வி அமைச்சை எவ்வாறு பெற வேண்டும் என்பதும் எமக்குத் தெரியும்.மாகாணசபைத் தேர்தல் முடிந்ததும் அதனை பார்க்கலாம் எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!