தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு எமக்குக் கிடைத்த வெற்றியாகும் - ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்படுவது எமக்கு கிடைத்த வெற்றி என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சம்பள நிர்ணய சபையின் ஆயிரம் ரூபா கொடுப்பனவு தீர்மானத்திற்கு எதிராக எதிரணி தரப்பு தாக்கல் செய்திருந்த மனு நேற்று உயர்நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு எதிரான மனு மீதான முதற்கட்ட விசாரணையை அடுத்து கம்பனி தரப்பு கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம் இம்மாதம் 27ஆம் திகதி வரை ஒத்தி வைத்தது.

இதன்காரணமாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளவாறு பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை பெறக் கூடியவர்களாக உள்ளனர்.
ஏற்கனவே நுவரலியா அரச பெருந்தோட்டத்துறையொன்றின் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட தொழில் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோருக்கு எமது நன்றிகளை தெரிவிக்கின்ற அதேவேளை குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இவ்விடயத்தில் பொறுமையாக இருந்து எம்மோடு கைகோர்த்து இருந்தமையால் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.