ஃபேஸ்புக் ஊடாக கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்டம்; 11 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியும் சட்டவிரோத போதை பொருள்களை பயன்படுத்தியும் ஃபேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்டத்தில் கலந்து கொண்டிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி - அனிவத்த பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் களியாட்டத்தில் கண்டியைச் சேர்ந்த வர்த்தகர்களின் பிள்ளைகளே கைது செய்யப்பட்டுள்ளதோடு,21 வயதுக்கு குறைவான இளைஞர்கள் பல்வேறு போதைப் பொருள்களைப் பயன்படுத்தி இருந்ததாகவும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த ஃபேஸ்புக் களியாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாகவும் இதில் கிரிபத்கொட,மீரிகம,ஜா-எல, கடவத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்ததாகவும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் களியாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரண்டாயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளது. களியாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நபர் உள்ளிட்ட 11 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,அதில் 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.