Tuesday, March 9, 2021

நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும் அரசாங்கத்தினால் வீடு மற்றும் வியாபார நிலையம்!

நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் ஒரு பாதையை அபிவிருத்தி செய்து ஒரு வீட்டை மற்றும் அதையொட்டிய ஒரு வியாபார நிலையத்தையும் நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நேற்று(08) ஆரம்பமானது.

இந்த வேலைத்திட்டம் கொழும்பு, களுத்துறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது நாடுபூராகவும் ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்டத்திற்கு "எங்கள் கிராமம்-எங்கள்" கடை என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் குறைந்த வருமானத்தை பெறுகின்றவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் மொத்தமாக 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் காணப்படுகின்றன.

இந்தப் பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் குறைந்த வருமானத்தை உடைய குடும்பம் ஒன்றிற்கு இந்த வீடு மற்றும் வியாபார நிலையம் வழங்கப்படும்.இங்கு ஒரு வீடு மற்றும் வியாபார நிலையத்தை கட்டி முடிப்பதற்கு செலவாகும் தொகை கிட்டத்தட்ட ரூ.40 லட்சம் ஆகும்.

மேலும் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ஆகியோரின் தலைமையில் ஹோமாகம கிராம அதிகாரி பிரிவுகளுக்கான புதிய வீடு மற்றும் வியாபார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!