Tuesday, February 2, 2021

யாழ்.பல்கலை மாணவர்கள் ஐவர் உட்பட ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் உள்ளிட்ட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர்,காத்தான்குடி,கல்முனை, மூதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் இவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணைந்த விஞ்ஞானச் சுகாதாரக் கற்கைகள் பீடத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறினார்.

இந்த 5 மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று(01) அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின்போதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒருவருக்கு எழுதுமட்டுவாழ் வீதித் தடையில் வைத்து நேற்று(01) பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து, தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் 373 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் 6 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!