ஹட்டன் நகரில் உள்ள இரு பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாடசாலை ஒன்றும் ஹட்டன் வலயக்கல்விப் பணிமனையும் மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
11 மாணவர்கள் இரு ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் தரம்-9 ஐச் சேர்ந்த மாணவன் ஒருவர் சுகயீனம் காரணமாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொற்றுக்குள்ளான மாணவனோடு தொடர்பை பேணி வந்த ஆசிரியர்கள் 14 பேர் உள்ளடங்கலாக 34 பேர்,14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கை நேற்று(26) வெளியானபோது 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
குறித்த 13 பேரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.