மாணவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை அழைத்துச் சென்ற சம்பவம் சம்மாந்துறையில் பதிவாகியுள்ளது.
அம்பாறை-சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாணவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்கு சுகாதார அதிகாரிகள் வருவதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பாடசாலைக்கு படையெடுத்த பெற்றோர்கள்,தமது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து விடுமாறும், பிசிஆர் எடுக்க வேண்டிய தேவையில்லை எனவும் அதிபர்களுடன் முரண்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து அதிபர்கள் இது ஒரு வதந்தி என தெரிவித்தனர்.
இருந்தபோதும் பெற்றோர் அதிபர்களின் பேச்சை பொருட்படுத்தாது தமது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து அழைத்துச் சென்றுள்ளதால் அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.