Saturday, January 30, 2021

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளேன்-திகாம்பரம் எம்.பி



பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வருகின்ற 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று(30) நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த போவதாக கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களே இன்று அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கின்றனர். பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.ஒருவேளை நாமும் அரசாங்கத்தின் பக்கம் இருந்திருந்தால் மக்களின் சாபத்துக்கு ஆளாக நேரிட்டிருக்கும் என கூறியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக் கொடுக்கப்படும் என உறுதி வழங்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியும் இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.ஆனால் ஜனாதிபதியின் உத்தரவையும் கம்பனிகள் ஏற்பதாக தெரியவில்லை. மேலும் தொழிற்சங்கங்களும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே பெருந்தோட்ட கம்பனிகளை ஒரு நிலைக்கு கொண்டு வர முடியும் என்றும் இதனை செய்வதற்கு மாற்று தரப்பினர் தயாராக இல்லை என்றும் சம்பள விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் தான் கேள்விகளை எழுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கமே அறிவித்தது,எனவே அதற்கு அழுத்தம் கொடுத்துதான் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தங்களது ஆட்சியில் 7 பேர்ச்சஸ் காணியில் அமைந்த வீட்டை மாற்று தரப்பினர் விமர்சித்திருந்ததாகவும், 20 பேர்ச்சஸ் காணி பெற்றுக் கொடுக்கப்போவதாகவும் சிளப்(slab) வீடுகள் அமைத்து கொடுப்பதாகவும் சூளுரைத்தவர்கள் தற்போது 10 பேச்சஸையே வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!