Tuesday, January 26, 2021

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதி



பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சம்பள கட்டுப்பாட்டு சபை மூலம் இதற்கான அதிகரிப்பை மேற்கொள்ளும் வகையில் தொழில் உறவுகள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயற்படுத்தும் வகையில் தோட்டத்தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை.

பெருந்தோட்ட முதலாளிமார் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் நாளாந்த சம்பளத்தை 920 ரூபாய் வரை மாத்திரம் அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு வரவு செலவுத் திட்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமான வகையில் சம்பள கட்டுப்பாட்டு சபை மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாய் வரை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!