Tuesday, January 19, 2021

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் ஒரு மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.

அரச தாதியர் சங்கம்,ஐக்கிய தாதியர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக ஒன்று கூடிய தாதியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையில் உள்ள தாதியர்களுக்கான சிகிச்சை பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இதன் போது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு இடத்தை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும்,சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!