அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி நடந்தது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.அவர் 306 ஓட்டுகள் பெற்றார்.குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டிரம்ப் (232 ஓட்டு) தோல்வியை தழுவினார்.ஆனால் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கூறி தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.
இதுதொடர்பாக ட்ரம்ப் தரப்பில் மாகாண கோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.இதன் மூலம் சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தது.
எனினும் ட்ரம்ப் தொடர்ந்து தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வந்தார். அதேபோல் அவரது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் ஜோ பைடன் வருகிற 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை பாராளுமன்றம் மேற்கொண்டது.
இதையடுத்து தேர்தலில் வென்ற மாகாண சபை உறுப்பினர்கள் அதிபரைத் தேர்வு செய்வதற்கான தங்களது வாக்குகளை கடந்த டிசம்பர் 14ஆம் திகதி செலுத்தி அவற்றை சீலிட்ட கவரில் அனுப்பி வைத்தனர்.
அந்த வாக்குகள் எண்ணப்படுவதற்காக அமெரிக்க பாராளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் கட்டிடத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இந்த பணிகளை தடுப்பதற்காக ட்ரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் ஆறு மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை பொலிஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாராளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
அதன் பின்னர் பாராளுமன்றத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்று அதிபராக தேர்வானார்.அவர் வெற்றி பெற்றதாக துணை அதிபர் மைக் பென்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்து சான்று அளித்தார்.அதன் பின்னர் அதிகார மாற்றத்திற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தார்.இதனால் ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்பதில் இருந்த கடைசி சிக்கலும் நீங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.