இணைய வழி மூலமாக நிதி மோசடி செய்த நைஜீரிய நபர் உட்பட 3 பேரை நுகேகொட பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
மேலும் பல்வேறு நிதி மோசடி களுக்காக பயன்படுத்தப்படும் 22 போலி அடையாள அட்டைகள்,18 வங்கி கணக்கு புத்தகங்கள்,29 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 12 கையடக்க தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்கள் சந்தேக நபரான நைஜீரியரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
நைஜீரிய நபர்களின் தலையீடு மூலமாக இணைய வழி நிதி மோசடி சம்பவங்கள் நம் நாட்டில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நைஜீரிய நபர் இணைய முகவரிகளை ஹேக் (HACK) செய்வதன்மூலம் இவ்வாறான நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே மின்னஞ்சல் முகவரி மூலமாக இணையத்தில் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.