covid-19 தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுலா தொழில் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மின்சார கட்டண பட்டியல் மற்றும் நீர் கட்டண பட்டியலை செலுத்துவதற்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தொடர்ச்சியாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வீடு,வணிக வளாகம் மற்றும் தொழில்துறை மின் பாவனையாளர்களுக்கு குறித்த காலப்பகுதியில் மின்சார கட்டணத்தை செலுத்தி கொள்வதற்காக மின் கட்டணத்தில் இருந்து ஆறு மாத நிவாரண காலம் பெற்றுக்கொடுத்தல் மற்றும் அதுவரை மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள திரையரங்குகளில் 2020 மார்ச் மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையான மின்சார கட்டணத்தை பட்டியல் தினத்திலிருந்து 12 சம மாதத் தவணை கொடுப்பனவில் செலுத்தி நிறைவு செய்ய வாய்ப்பு அளித்தல் மற்றும் அதுவரை மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள விடுதிகளின் 2020 மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை சேகரிக்கப்பட்ட மின்சார கட்டண பட்டியல் மற்றும் நீர் கட்டண பட்டியல்களை 12 சம மாத தவணைகளில் செலுத்துவதற்கு வாய்ப்பை வழங்குதல் மற்றும் அதுவரை குறித்த விநியோகங்களை துண்டிக்காமல் இருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.