கிழக்கு மாகாணத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!


தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்த பிரதேசம், ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக 750 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைய கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் தொடர்ந்து வரும் 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அது பெரும்பாலும் மேற்கு- வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் முல்லைத்தீவுக்கும் இடையேயான இலங்கையின் கிழக்குக் கரையை புதன்கிழமை மாலையளவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல்,மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு,வட மத்திய கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோமீட்டர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு மிக பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 30 தொடக்கம் 40 கிலோ மீட்டர் வரை காணப்படும்.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.