கொவிட்-19 க்கான முதலாவது தடுப்பு மருந்தை அயர்லாந்தை சேர்ந்த முதியவர் ஒருவர் ஏற்றிக்கொண்டார்.சோதனையொன்றுக்கு வெளியே பைஸர் கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்ற முதலாவது நபராக, வட அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதான மார்கரெட் கீனன் இன்று மாறியுள்ளார்.

பிரித்தானியாவானது தனது குடித்தொகைக்கு தடுப்புமருந்தை ஏற்ற ஆரம்பித்துள்ள நிலையிலேயே கீனன் உலகில் முதலாமவராக கொவிட்-19 தடுப்பு மருந்தொன்றைப் பெற்றுள்ளார்.

அதிகாலையில் எழும்புகின்ற கீனன், மத்திய இங்கிலாந்தின் கொவென்றியீலுள்ள தனது உள்ளூர் வைத்தியசாலையில், தனது 91ஆவது வயதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12:01 மணிக்கு தடுப்புமருந்தை அவர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், கீனன் விடுதியொன்றிலிருந்து சக்கரக் கதிரையில் வெளியில் தள்ளி வரப்படும்போது பாதுகாப்பு அங்கிகளை அணிந்திருந்த தாதியர் நடைபாதையில் வரிசையாக நின்று அவருக்கு உற்சாகமளித்திருந்தனர்.

கொவிட்-19-க்கெதிராக தடுப்புமருந்தைப் பெறுவதில் முதலாவது நபராக தான் மிகவும் சலுகையுடையரவாக உணருவதாகத் தெரிவித்த கீனன், இது தனக்கு முற்கூட்டிய பிறந்தநாள் பரிசென்று கூறியுள்ளார்.

தனது பொதுசன குடித்தொகைக்கு தடுப்புமருந்தையேற்ற ஆரம்பித்த முதலாவது நாடு பிரித்தானியா ஆகும்.

இதுவரையில் கொவிட்-19ஆல் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.