Tuesday, December 8, 2020

நிலவில் தேசியக்கொடியை நட்டது சீனா!



அமெரிக்கா நிலவில் தனது தேசிய கொடியை முதன் முதலில் நட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு சீனா தனது தேசிய கொடியை நிலவில் நட்டுள்ளது.

நிலவின் மேற்பரப்பில்,காற்றில்லாமல் அசைவற்று இருக்கும்,ஐந்து நட்சத்திரங்களை கொண்ட சீனாவின் செங்கொடி பறக்கும் படத்தை சீன தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.இது சீனாவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும்.

இந்தப் படங்கள் கடந்த வியாழக்கிழமை நிலவின் பாறை மாதிரிகளுடன் அங்கிருந்து புறப்படுவதற்கு முன் சாங்கே-5 விண்கலத்தின் கேமரா மூலம் எடுக்கப்பட்டன.

முந்தைய இரண்டு சீன நிலவு பயணங்களில் கைவினை பூச்சுக்களாலான கொடிகள் பயன்படுத்தப்பட்டன.எனவே அவற்றை நிலவில் நாட்ட முடியவில்லை.

1969ஆம் ஆண்டு அமெரிக்கா நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ-11 விண்வெளித் திட்டத்தின் போது நிலவில் தன் முதல் கொடியை நாட்டியது.எட்வின் பஸ் ஆல்ட்ரின் நிலவில் அமெரிக்காவின் முதல் கொடியை நட்டார்.

ஆல்ட்ரின் அமெரிக்க கொடியை அப்பல்லோ 11 விண்கலத்தின் அருகிலேயே நட்டார் விண்கலம் சந்திரனில் இருந்து புறப்படும் போது தான் நட்ட அமெரிக்க கொடியானது சேதமாகியிருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறினார்.

1972ஆம் ஆண்டு வரை, அடுத்தடுத்து நிலவுக்கு பயணித்த ஐந்து விண்வெளி திட்டங்களின் போது மேலும் ஐந்து அமெரிக்க கொடிகளை நிலவில் நட்டது அமெரிக்கா.

அமெரிக்கா நட்டு வைத்த கொடிகளில் 5 கொடிகள் அப்படியே இருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக கடந்த 2012ம் ஆண்டு நாசா குறிப்பிட்டது. சூரியனின் வெளிச்சத்தில் அந்த கொடிகள் நிறமற்றுப்போய் இருக்கலாம் என நிபுணர்கள் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்கள்.

சீன கொடியை நிலவில் நாட்டியது, அமெரிக்கா நிலவில் கொடி நாட்டிய போது இருந்த உற்சாகம் மற்றும் உத்வேகத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது என சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தித்தாள் கூறுகிறது.

1969 இல் எடுக்கப்பட்ட இப்படத்தில் இருப்பவர் எட்வின் ஆல்ட்ரின் படத்தை எடுத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்.

சாங்கே-5 லேண்டர் வாகனம் சீனாவின் கொடியை நிலவில் நாட்டியது.இந்த விண்கலம் சந்திரனில் இருந்து பாறைகள் மற்றும் மண் மாதிரிகளை எடுத்துக் கொண்டு சந்திரனில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கும் வின் சுற்றுக்கலனுக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த விண்கலம் சீனாவின் மங்கோலிய உள்பகுதிகளில் தரையிறங்க இலக்கு வைத்து பயணிக்கும்.

சீனாவின் கொடி 2 மீட்டர் அகலமும் 90 சென்டிமீட்டர் உயரமும்
 சுமார் ஒரு கிலோ எடையும் கொண்டது.சீன கொடியின் எல்லா பகுதியிலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

உதாரணமாக அதிக அளவில் குளிரைத் தாங்கும் என இந்த திட்டத்தின் தலைவர் லீ யுன்ஃபெங் குளோபல் டைம்ஸ் இடம் கூறியுள்ளார்.

பூமியில் பயன்படுத்தப்படும் சாதாரண கொடி நிலவில் நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்காது என இந்த திட்டத்தின் மேம்பாட்டாளர் செக் சாங் கூறினார்.

1969 இல் அமெரிக்கா முதன் முதலில் தனது கொடியை நிலவில் நட்டது.அதன்பின் 5 அமெரிக்க கொடிகள் நிலவில் நடப்பட்டன. 1971இல் எடுக்கப்பட்ட இப்படத்தில் இருப்பவர் ஜேம்ஸ் இர்வின்.

சீனா முதன்முதலில் நிலவில் தரையிறங்கியபோது சீனாவின் தேசிய கொடி நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டது. சாங்கே-4 தரையிறங்கி(லேண்டர்) மற்றும் வின் ஊர்தி(ரோவர்) 2019இல் கொடியை நிலவில் இருட்டான பக்கத்திற்கு கொண்டு சென்றது.

இரண்டு முறையும் சீனாவின் கொடி ஒரு கம்பத்தில் உண்மையான துணிக்கொடியை போலல்லாமல் கைவினைப் பூச்சில் இருந்தது.

கடந்த ஏழு ஆண்டுகளில் சந்திரனில் சீனா மூன்றாவது முறையாக வெற்றிகரமாக தரையிறக்கம் செய்து இருக்கிறது.



Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!