பொகவந்தலாவை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் மத்தியப் பிரிவில் ஒருவரும், பொகவந்தலாவை லொய்னோன் தோட்டப் பகுதியில் ஒருவரும் உட்பட மொத்தம் இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொதுசுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (18.12.2020) மாலை வெளியான பிசிஆர் அறிக்கையினூடாக குறித்த இரண்டுத் தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் பகுதியில் இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர், வத்தளை ஹுணுபிடிய பிரதேசத்தில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து கடந்த மூன்றாம் திகதி குடும்பத்துடன் பொகவந்தலாவைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த குடும்பத்தினர் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளை, கடந்த 15ஆம் திகதி குறித்த நபருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் நுவரெலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

தொற்றுக்குள்ளான நபர் நேற்றைய தினம் 18.12.2020 பொகவந்தலாவை நகரத்தில் உள்ள சிகையலங்கார நிலையத்துக்கு சென்று, டியன்சின் நகரில் உள்ள மதுபானசாலைக்குச் சென்று வந்துள்ளதாக பொகவந்தலாவை பொதுசுகாதார அதிகாரிகளின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

தொற்றுக்குள்ளானர் 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையாவர். இவரோடு, தொடர்பினைப் பேணி வந்தவர்கள் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, பொகவந்தலாவை நகரத்தில் சிகையலங்கார நிலையத்தினை மூடுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

பொகவந்தலாவை லொய்னோன் தோட்டப் பகுதியில் இனங்காணப்பட்ட தொற்றாளர் கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியிலிருந்து வந்தவரெனவும், இவருக்கு 50 வயது எனவும் தெரியவந்துள்ளது.இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இவருடன் தொடர்பினைப் பேணிவந்தவர்களும், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை இனங்காணப்பட்ட இரண்டு தொற்றாளர்களும் லக்கல பல்லேகல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு சுகாதாரப் பாதுகாப்போடு, அனுப்பி வைக்கப்பட்டனர்.