Sunday, December 20, 2020

நுவரெலியா மாவட்டத்தினை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டப்பணி.

அரசாங்கத்தின் சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தினை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பேராசிரியர் நாலக்க கொடஹேவா தலைமையில் நேற்று(19.12.2020) சர்வமத வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் கினிகத்தேனை,ஹட்டன்,கொட்டகலை,தலவாக்கலை ஆகிய நகரங்கள் புதுப் பொலிவு பெற உள்ளன.

இத் திட்டத்திற்கு அமைவாக நுவரெலியா மாவட்டத்தில் கித்துல்கலை தொடக்கம் நுவரெலியா வரையிலும், நுவரெலியா தொடக்கம் கண்டி வரையிலும், நுவரெலியா தொடக்கம் பதுளை வரையிலும் சுற்றுலாத் துறையினரை மனங்கவரக்கூடிய இடங்களையும் நகரங்களையும் தெரிவுசெய்து அபிவிருத்தி செய்யப்படும்.

விசேடமாக நகர அலங்காரம்,பூங்காக்கள் நடைபாதைகள் அமைத்தல், பார்வை கூடங்கள் அமைத்தல், கவர்ச்சிகரமான வர்த்தக நிலையங்கள் அமைத்தல்,புதிதாக உணவகங்கள் தங்குமிட விடுதிகள் அமைத்தல் போன்ற பல சுற்றுலாத்தறைக்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதில் முதற்கட்ட பணியாக கினிகத்தேனை நகரினை அழகுபடுத்தி வாகன தரிப்பிடம் கொண்ட ஒரு நகரமாக விருத்தி செய்யப்படவுள்ளது.ஹட்டன் நகரிலும் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இரண்டாவது கட்டத்தின் கீழ் கொட்டகலையில் காணப்படும் ஈரவலயமான பகுதியில் பூங்கா மற்றும் சுற்றுலா பயணிகளின் நடைபாதைகள்,வர்த்தக நிலையங்கள் ஆகியன அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.இதனைத்தொடர்ந்து தலவாக்கலை நகரும் அழகுபடுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

அமைச்சர் சி.பி.ரத்னாயக்க மற்றும் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆரம்பகட்ட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,நகர பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!