போலியான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு 5 வருட சிறை தண்டனை..

போலித் தகவல்களை வெளியிடும் நபர்களுக்கு எதிராக 5 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.


தற்போது நாட்டில் பொதுமக்களை பரபரப்பு அடைய செய்யும் தகவல்கள் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர்,

தனிமைப்படுத்தல் சட்ட உத்தரவுக்கு முரணாக செயற்படும் அல்லது உண்மை தகவல்களை மறைத்து,ஆவணங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்யும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

தற்போது நாட்டில் காணப்படும் நிலைமையில் மக்களின் தகவல்களை பதிவு செய்பவர்களில் எந்த நபராவது பொய்யான தகவல்களைப் பதிவு செய்தால் அது போலி ஆவணம் தயாரித்தல் தொடர்பான குற்றத்தின் கீழ் வரும்.

இது சட்டத்தின் 399 சரத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று வேறு ஒரு நபர் போல் செயற்பட்டு குற்றத்தை செய்ததாக குற்றம் சுமத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இப்படியான குற்றத்தை செய்யும் நபர்களுக்கு எதிராக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக் கூடிய ஏற்பாடுகள் சட்டத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.