கொவிட் 19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த ஜனனம் அறக்கட்டளை எடுத்துவரும் புதிய முயற்சி !

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கொவிட் 19 பெருந்தொற்று தாக்கத்தின் வேகம் அதிகரித்து வருகின்ற நிலையில் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக தொற்று நாசினிகளை விசிறும் வேலைத்திட்டத்தை ஜனனம் அறக்கட்டளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

கலாநிதி வி ஜனகனின் எண்ணக்கருவில் உருவான சுத்தமான கொழும்பு திட்டத்தின் கீழ் இந்த பணிகள் கொழும்பின் பல பாகங்களிலும் நாளாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வேண்டுகோளுக்கு இணங்க இதன் இரண்டாம் கட்ட பணிகள் 
அண்மையில் மிரிஹான  பொலிஸ் வளாகத்தினைச்  சூழவுள்ள பகுதிகளில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் 19 பெரும்பரவலில் இருந்து இலங்கை மக்களை காப்பாற்றப் போராடும் பணியில் ஈடுபட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு பொலிஸ் நிலையங்கள் பலவற்றிற்கு கிருமிநாசினி விசிறும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேபோன்று மேலும் பல தொடர்மாடி குடியிருப்புக்கள் கொரோனா பெருந்தொற்று ஏற்பட சாத்திமுள்ளதாக கருதப்படும் பிரதேசங்களுக்கும் இந்தத் திட்டம்  விரிவுபடுத்தப்படவுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வாழைத்தோட்டம், மருதானை மற்றும் மாளிகாவத்தை ஆகிய பொலிஸ் நிலையங்களில் நேற்று வைரஸ் தொற்றுநாசினி விசிறப்பட்டது.

அதேவேளை, காலி வீதியில் வௌ்ளவத்தை பொலிஸ் நிலையம் அண்மையில் கொவிட் தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் அதன் அபாய நிலையை கருத்தில் கொள்ளாது ஜனனம் அறக்கட்டளையின்
உறுப்பினர்கள் தொற்று நீக்கி மருந்துகளை விசிறும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

நேற்றைய தினம் கடற்கரையோர பொலிஸ் நிலையம், பொரளை பொலிஸ் வளாகம் உட்பட மேலும் சில மாடி குடியிருப்புகள் மற்றும் மக்கள் அதிகம் செறிந்து வாழும் மாடிக் குடியிருப்பு பகுதிகளிலும் தொற்று நீக்கல் பணிகள்
தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக கிருமி நாசினி விசுறும் நடவடிக்கையில் கலாநிதி வி. ஜனகனின் ஜனனம் அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்களும், தன்னார்வ தொண்டர்களும் மற்றும்  பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும்
கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.