முழு நாடும் முடக்கப்படுமா? ஜனாதிபதி அளித்துள்ள விளக்கம்.

கொவிட் 19 தொற்றானது சுகாதாரம்,பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான பல தாக்கங்களை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் முதல் கொரோனா தொற்றாளியை கடந்த மார்ச் மாதம் நாங்கள் அடையாளம் கண்ட நாளிலிருந்து மக்களின் பாதுகாப்பிற்காக ஒரு அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

'இந்த நோய் தொற்றுக்கு நிரந்தர சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் இனி நம் நாட்டை முற்றாக மூடிவிட்டு மக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது.பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதன் விளைவானது நமது குழந்தைகளின் கல்வியில் பல ஆண்டுகளுக்கு தாக்கத்தை செலுத்த கூடும்'.

மேலும் அன்றாடம் தொழில் செய்து வாழ்பவர்கள் மற்றும் வணிக சமூகத்தின் மீது கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள தாக்கம் பாரியளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையர்களாகிய நாம் அனைவருமே அனைத்து அரசியல் சித்தாந்தங்களையும் வேறுபாடுகளையும் களைந்துவிட்டு நமது நாட்டின் பாதுகாப்பிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் ஒன்றுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் நாம் ஒவ்வொருவருமே சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பதன் மூலமும் நல்ல சுகாதார பழக்கவழக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலமும் மட்டுமே கொவிட்-19 நோய் தொற்றை தடுக்க முடியும் என கூறியுள்ளார்.

மேலும் முழு நாட்டையும் முடக்குவதால் அல்ல,நாம் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலமே நோய்த் தொற்றை தோற்கடிக்க முடியும் எனவும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.