ட்ரம்ப் பங்கேற்ற நேரலையை துண்டித்த தொலைக்காட்சிகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆதாரமற்ற செய்திகளைப் தொடர்ச்சியாகப் பகிர்ந்ததாக ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்ற நேரலையை தொலைக்காட்சி நிறுவனங்கள் துண்டித்தன.


அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பைக் காட்டிலும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் வியாழக்கிழமை அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடப்பு ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்றுப் பேசினார்.

ஜனநாயகக் கட்சியினர் மோசடி செய்கிறார்கள் என்றும் அவர்கள் தேர்தல் முடிவுகளை அபகரிக்க முயல்வதாகவும் டிரம்ப் தனது உரையைத் தொடங்கினார். நீங்கள் சட்டப்பூர்வமான வாக்குகளை எண்ணினால், நான் எளிதாக வெல்வேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தனது உரையில் ஆதாரமற்ற தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சிகளான எம்.எஸ்.என்.பி.சி, ஏபிசி, சிபிஎஸ், சிஎன்பிசி மற்றும் என்.பி.சி ஆகியவை டிரம்பின் நேரலை உரையை துண்டித்துக் கொண்டன.

மேலும் டிரம்பின் உரையில் உண்மைத் தன்மை சரிபார்ப்புக்கு நிறைய இருக்கிறது எனத் தெரிவித்த ஏபிசி நிறுவனம் டிரம்ப் குறிப்பிடும் சட்டவிரோத வாக்குகள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்தது.

சி.என்.பி.சி தொகுப்பாளர் ஷெப்பர்ட் ஸ்மித், டிரம்ப் பெருமளவில் சொல்வது முற்றிலும் பொய்யானதாக இருப்பதால் நாங்கள் நேரலையைத் துண்டிக்கிறோம். எனத் தெரிவித்தார். என்.பி.சி செய்தி தொகுப்பாளரான லெஸ்டர் ஹோல்ட், டிரம்ப் பல தவறான அறிக்கைகளை வெளியிடுகிறார். இதில் மோசடி வாக்களிப்பு நடந்துள்ளது என்ற கருத்து உள்பட எவைக்கும் எந்த ஆதாரமும் இல்லை. என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நேரலையை தொலைக்காட்சிகள் துண்டிப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று குறித்து ஆதாரமற்ற தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக டிரம்பின் நேரலையை தொலைக்காட்சி நிறுவனங்கள் துண்டித்தது குறிப்பிடத்தக்கது.