பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை விரைவாக உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் விரிவாக உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


நேற்று(16) காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமைச்சர் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகள் குறுகிய காலத்திற்குள் வெளியிட முடிந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் இந்த பரீட்சை நடைபெற்று ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர்தான் பல்கலைகழகங்ளுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடைமுறை இருந்து வருகின்றது.

இதுவே கடந்த பல வருடங்களாக தொடர்ந்து வரும் நடைமுறையாகும்.இந்த நடைமுறை குறித்து எந்த வகையிலும் திருப்திகொள்ள முடியாது.நாம் இதில் ஏற்படும் தாமதத்தை முற்றாக நீக்குவதற்கு முடிந்த வரையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். படிப்படியாக இந்த நிலையை மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.மாணவர்களுக்கு தமது உயர் கல்வியைத் திட்டமிட்ட வகையில் விரைவாக தொடர்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில் இந்த பெறுபேறுகள் நேற்றையதினம் கல்வி அமைச்சின் பரீட்சை திணைக்களத்தின் இணையத் தளங்கள் மூலம் வெளியிடப்பட்டன.

பரிட்சைக்கு சுமார் 3 லட்சத்து 36 ஆயிரம் மாணவர்கள் தோற்றி இருந்தனர்.இந்த வருடத்தில் இந்த பரீட்சை பெறுபேறுகளை 33 நாட்களில் வெளியிட முடிந்துள்ளது. முன்னர் இந்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிட பல மாதங்கள் செல்லும். இந்த துறை சார்ந்த அனைவரினதும் அர்ப்பணிப்பின் காரணமாகவே மாணவர்களின் பெறுபேறுகளை விரைவாக வெளியிட கூடியதாக இருந்தது.மற்றும் ஒரு பெருமைக்குரிய விடயம் என்னவென்றால் எமது மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை சென்று கல்வி பயின்று வருகின்றனர். இம்முறை இந்த பரிட்சையில் 10 பேர் 200 புள்ளிகள் பெற்று சித்தி பெற்றமை பாராட்டத்தக்கதாகும் என்று தெரிவித்தார்.

நாட்டின் பெறுமதிமிக்க சொத்து மாணவர் சமூகமாகும்.அவர்களின் முன்னேற்றத்திற்காக சமகால அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்துவருகின்றது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.