கடின கணிதத்தை மலையகத்துள் எளிமையாக்கிய ஜீவராஜன் எனும் ஆளுமை!

கடின கணிதத்தை மலையகத்துள் எளிமையாக்கிய ஜீவராஜன் எனும் ஆளுமை..


கணிதம் என்றாலே கடினம் என்ற வார்த்தையும் கூடவே சேர்ந்து வரும் 1990 இற்கு முற்பட்ட மலையகத்தின் வரலாற்று காலம் அது. ஒரு சிலர் மட்டுமே கணிதத்தை விரும்பி படிக்கும் போது, அநேகமானவர்கள் அதை விரும்பாமலேயே கற்ற தசாப்தங்கள். அதற்கு காரணம் அந்நேரம் மலையக பாடசாலைகளில் நிலவிய புலமை மிக்க கணித ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையே. கணிதத்துறையில் ஒரு எல்லைக்கு அப்பால் மாணாக்கர் தாண்ட முடியாத அந்த 90ற்கு முற்பட்ட காலங்களில் ஓரிருவர் மட்டுமே கணிதத்தில் வல்லமையும் அந்த துறையினூடாக உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக கல்வியும் கற்றனர்.

1994 ஆம் ஆண்டு நானும் எனது நண்பர்களும் உயர்தரத்தில் கணிதம் கற்றப்பதற்காக பல்வேறுபட்ட தோட்ட மற்றும் நகர பாடசாலைகளிலிருந்து ஹைலன்ஸ் கல்லூரி நாடி வந்தோம். அப்போது அந்த பிரதேசத்தில் உயர்தரத்தில் கணிதத்திற்காக இருந்த ஒரேயொரு தமிழ் பாடசாலை ஹைலன்ஸ் கல்லூரி மட்டுமே. பொறியியல் (Engineering) துறையில் வருடமொன்றுக்கு 20வரை அனுமதி ஒதுக்கீடு இருந்த நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஹைலன்ஸ் கல்லூரியில் இருந்து ஆகக்கூடியது ஒருவரை மாத்திரமே பல்கலைக்கழகம் அனுப்பிய ஒரு வறட்சியான காலம். அவ்வாறு சென்ற அந்த ஓரிருவர் எவ்வாறு பல்கலைக்கழகம் சென்றார் என தேடியதில் நாம் அறிந்த விடயம், பொகவந்தலாவ சென். மேரிஸ் கல்லூரியில் கற்பித்துக்கொண்டிருந்த ஒரு ஆசிரியரிடம் மேலதிகமாக உயர்தர கணிதம் கற்றதனாலாயே அந்த ஓரிருவர் கணிதத்தில் உயர் சித்தி பெற்று பல்கலைக்கழகம் சென்றுள்ளனர் என்பதாகும். 


நாங்களும் பாடசாலை முடிந்தவுடன் சென். மேரிஸ் கல்லூரி நோக்கி படையெடுத்தோம். அங்குதான் ஜீவராஜன் எனும் மாமனிதரை முதல் தடவையாக சந்தித்தோம். அவர் கற்பித்த முதல் வகுப்பிலேயே அவரது முழு ஆளுமையையும் முழுமையாக தெரிந்துக்கொண்டோம். அந்த நேரத்தில் எமக்கு மீதமிருந்தது உயர்தரத்தில் ஒருவருடம் மாத்திரமே. தூய மற்றும் பிரயோக கணிதங்கள் உள்ளடக்கிய அந்தகால உயர்தர கணிதத்தை முடிக்க எமக்கு ஒரு வருடம் போதாமல் இருந்தது. எனது நண்பர்கள் சிலரின் பெற்றோரின் உதவியுடன் அவரை சென். மேரிஸ் கல்லூரியில் இருந்து ஹைலன்ஸ் கல்லூரிக்கு இடமாற்றம் பெறச்செய்தோம். இரவு பகலாக எங்களுக்காக உழைத்த அவரின் ஒப்பற்ற, அர்பணிப்பான கற்பித்தல், எல்லா பாட அலகுகளையும் ஒரு வருடத்தில் கற்று முடிக்க எங்களுக்கு உதவியது. பிரயோக கணித பாடங்களை அவர் கற்பிக்கும் அழகே தனி. கரும்பலகையில் அவர் படங்களை வரைந்து விளக்கங்களை கைகளால் செய்து காட்டும்போது அந்த வினாவின் முப்பரிமாண உருவத்தையே எங்கள் கண்முன்னே கொண்டுவந்துவிடுவார். பாடத்திட்ட அலகுக்கு அப்பால் சென்று ஆங்கில பாட புத்தகங்களிலிருந்தும் எங்களுக்கு வினாக்களையும் செய்முறை பயிற்சிகளையும் கொண்டுவந்து எங்களுக்கு கணிதத்தின் லாவகத்தினை புரியவைப்பார். இறுதி பரீட்சைக்கு செல்லும் முன் மிகப்பெரிய தன்நம்பிக்கையை எங்கள் அனைவருக்கும் கொண்டுவந்துவிடுவார். எந்த நேரமும் கற்பித்து கொண்டே இருக்கும் இவரது பண்பு மாணவர்களை கற்றல் செயற்பாடுகள் தவிர்ந்து வேறு எந்த பிரயோசனமற்ற செயல்களை செய்வதிலிருந்து தடுத்துவிடும். காலை 8 மணி தொடங்கி இரவு 12 மணி வரை கற்ற எத்தனையோ நாட்கள் உண்டு. நன்றாக கற்கும் மாணவர்களை உற்சாகப்படுத்துவதிலும் பாராட்டுவதில் என்றுமே அவர் தவறியதில்லை. அவரின் பாராட்டை பெறுவதிற்காகவே நாங்கள் எல்லோரும் கடும் முயற்சி எடுத்து கற்றோம். இன்று அவரின் மாணாக்கரான நாங்கள் எல்லோரும் பலரின் பாராட்டுகளை பெற்றுக்கொண்டிருக்கிறோம்.

அவரின் குடும்பத்திலே இரண்டு மதங்கள் உண்டு. ஆகவே வருடம் முழுவதும் எண்ணற்ற பண்டிகைகள். ஆனால் அவர் கொண்டாடும் ஒரே ஒரு பண்டிகை நாள், அது உயர்தர பெறுபேறு வெளியாகும் நாள். இந்த காலம் போல் இணையத்திலும் கைபேசியிலும் பரீட்சை பெறுபேறுகள் வருவதில்லை. இரவு அஞ்சல் புகையிரதத்தில் காலை தபாற்கந்தோர் ஊடாக பெறுபேறுகள் பாடசாலையை வந்தடையும். காலையிலேயே புகையிரத நிலையம் வந்து இரவு அஞ்சல் புகையிரத வருகைக்காக காத்து நிற்பார். தபாற்கந்தோரிலிருந்து பெறுபேறுகளை கையோடு எடுத்து வந்து எல்லாவிதமான பகுப்பாய்வுகளையும் செய்து பாடசாலையின் அறிவிப்பு பலகையில் பெறுபேறுகளை ஒட்டிவிடுவார். அந்த வருடத்திற்கான பண்டிகையின் உச்சகட்டம் அது. மாணாக்கர் பெரும் பெறுபேறுகளுக்கு அவரை விட மகிழ்ச்சியும் உற்சாகமும் அடையும் ஒருவரை நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை.

ஜீவராஜன் ஆசிரியரின் அர்ப்பணிப்பான சேவையும் மாணவர்கள் உயர்ந்த பெறுபேறு பெறுவதில் அவர் காட்டிய உண்மையான அக்கறையும் எங்களை மென்மேலும் சிறப்பாக கற்க தூண்டியது. முதல் முறையாக ஹைலன்ஸ் கல்லூரியின் வரலாற்றிலேயே நான் கற்ற 1995 ம் ஆண்டு உயர்தரத்திலிருந்து 6 பேரை பொறியியல் (Engineering) துறையில் கற்பதற்காக அனுப்பி வைத்தார். அடுத்தடுத்த வருடங்களில் ஆறு பத்தாகவும் பத்து இருபதாகவும் மாறி ஒவ்வொரு வருடமும் இருபதிற்கு மேல் மாணவர்களை கணிதத்துறையினூடாக பல்கலைக்கழகம் அனுப்பினார். முன்னரெல்லாம் பல்கலைக்கழகத்தில் ஹைலன்ஸ் கல்லூரி அல்லது ஹட்டன் என்றால் என்ன, எந்த இடம் எனக் கேட்டவர்கள் மத்தியில் ஹைலன்ஸ் கல்லூரியையும் ஹட்டனையும் பிரபல்யமடைய செய்தார். இவர் ஊட்டி வளர்த்த கணிதம் எம்மக்களை பல்கலைக்கழகம் செல்வதோடு மட்டும் நிறுத்திவிடவில்லை. பல்கலைக்கழகத்திலும் மற்ற மாணவர்களுக்கு ஈடாக திறமையை வெளிக்காட்ட இவரது கணித அத்திவாரமும் மாணாக்கரை நன்நடத்தை மிக்கவர்களாக உருவாக்கியதுமே மிக முக்கிய காரணிகளாகும். கணிதத்தில் சிறப்புமிக்க ஒலிம்பியாட் பரீட்சையில் எம் மலையக மாணாக்கரை மிக உயரிய இடம் எட்டிச்செல்ல வழிவகுத்தார். இவரது மாணாக்கர்கள் பல்கலைக்கழகங்களில் அதி உயர் பெறுபேற்றினை பெற்று புலமைப்பரிசில் ஊடாக பட்டமேற்படிப்பு மற்றும் கலாநிதி பட்டங்கள் பெற வழிசமைத்தார். இவரது சிஷ்யர்கள் பெரும்பாலானோர் இன்று பொறியியலாளர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களாகவும் உள்ளனர். இலங்கையில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உயர் பதவிகளிலும் மிகவும் பெருமைக்குரிய இடங்களிலும் இருக்கின்றார்கள். இவரது அயராத உழைப்பும் இவரால் ஹைலன்ஸ் கல்லூரிக்கு இடப்பட்ட அஸ்திவாரமும் மிகவும் வலுவானது. இவரது கற்பித்தலும் நல்வழிப்படுத்தலுமான பண்பு எம் மலையக மாணவர்களை பாடசாலை கல்வியோடு மட்டும் நின்றுவிடாது உயர்கல்வியிலும் அதி உயர் பெறுபேற்றினையும், அவர்கள் கனவிலும் நினைத்திராத உயர் வெற்றிகளையும் பெற்று வாழ்க்கையில் ஜெயித்து, ஜீவராஜன் ஆசிரியருக்கும், ஹைலன்ஸ் கல்லூரிக்கும், எமது மலையக சமூகத்திற்கும் பெருமை தேடித்தர செய்துவிட்டார்.

குறுகிய காலத்தில் ஒரு அவதாரம் போன்று எம்மக்கள் மத்தியில் தோன்றி கணிதக்கல்வியில் மலையகத்தில் குறிப்பாக ஹட்டன் மற்றும் அண்டிய பிரதேசத்தில் ஒரு புரட்சியையே உருவாக்கி அக்கணிதத்தை கற்பித்துக்கொண்டிருக்கும்போதே 2010ம் ஆண்டு ஜூன் 8ம் திகதி மாணவர்களின் கைகளிலேயே உயிர்நீத்து எம்மை எல்லாம் ஆரா துயரத்தில் ஆழ்த்தி மறைந்து போனார் அந்த ஜீவராஜன் என்னும் அவதாரம். அவர் போட்ட விதை பல ஆலவிருட்சங்களாக பறந்து விரிந்து நிற்கின்றன. அதனது பலனை இன்றும் நாம் அறுவடை செய்துக்கொண்டிருக்கின்றோம். இந்த அறுவடைக்கு பின்னால் ஆசிரியர் ஜீவராஜனின் பல்வேறுப்பட்ட அர்ப்பணிப்புக்கள் உள்ளன.

ஜீவராஜன் என்னும் ஆளுமையின் காலம் மலையகத்தில், குறிப்பாக ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் ஒரு அத்தியாயம். ஆசிரிய சேவையின் உண்மையான எடுத்துக்காட்டு இவர். உலகம் முழுக்க உள்ள இவரது சிஷ்யர்களால் இவர் என்றென்றும் நினைவு கூறப்படுகின்றார். இவரது அர்பணிப்பான சேவையை தெரிந்த மாற்று இனத்தவர்கள் இப்படியான ஒரு மனிதரா என்று வியக்கின்றனர். இவரது சேவையை முன்னெடுத்து செல்வது எங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். குறுகிய காலமே எங்களுடன் இருந்து சென்ற இந்த அவதாரம் எங்களை எல்லாம் விட்டு எங்கும் மறைந்து விடவில்லை. இவர் எங்கள் மனங்களில் எப்போதுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.


நன்றி
கலாநிதி. S. K. நவரட்ணராஜா, Ph.D., P.E.
சிரேஷ்ட விரிவுரையாளர் 
பொறியியற் பீடம் 
பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராதனை