முறையான திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 11,12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலையை ஆரம்பிக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்தை கேட்டுள்ளனர்.
கடந்த கொவிட் நிலைமையின் போது பாடசாலைகளை திறக்க உரிய நடைமுறைகளை பின்பற்றியதாகவும் ஆனால் தற்போது அவ்வாறான நிலையை அவதானிக்க முடியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பாடசாலைகளை மீண்டும் திறக்க வேண்டுமானால் தற்சமயம் கிருமி தொற்றுநீக்கம் செய்திருக்க வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
உரிய திட்டமிடல் இல்லாமல் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை பொதுக் கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்த ஹண்தபாங்கொட "பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திடீரென பாடசாலைக்கு அனுப்புவது இல்லை.பெற்றோருக்கு அறிவித்து விசேட குழுக்களை அமைத்து அவர்களின் ஆலோசனைக்கு அமைய அதனை செயற்படுத்த வேண்டும்.அதிபர்கள் அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும்" என கூறினார்
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜெயசிங்க,கொவிட் அச்சுறுத்தல் நிலைமைக்கு பின்னர் மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும்போது விசேட திட்டத்துடன் அழைப்பது முக்கியம்.இதற்கான திட்டத்தை தயாரிக்க காலம் இருந்தது ஆனால் இப்போது கடந்த வியாழக்கிழமை பாடசாலைகள் மீண்டும் அடுத்த திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கூறப்பட்டது.அப்படியானால் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. மேலும் பாடசாலை குழுக்களை அமைக்குமாறு கோரப்ப்படுகின்றது.எனவே மீதமிருக்கும் நாளில் அவ்வாறு PHI மற்றும் MOH அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க முடியுமா?தற்போதைய நிலைமையில் அதனை செய்வது சாத்தியமற்றது என கூறினார்.
ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறுகையில், கொவிட் தொற்று ஏற்படாது என்பதை அரசாங்கம் பெற்றோருக்குத் தெளிவுபடுத்தி உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவார்கள் எனவும் கூறினார்.