கொரோனா தொற்றால் இறப்பவர்களின் இறுதிக்கிரியைகள் இன,மத அடிப்படையில் முன்னெடுக்கப்பட கூடாது

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களின் இறுதிக்கிரியைகள் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மாத்திரம் தான் முன்னெடுக்கப்படவேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகள் இன,மத அடிப்படையில் முன்னெடுக்கப்பட கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர் தற்போது கொரோனாவால் இறப்பவர்களின் இறுதிக் கிரியைகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து நாட்டில் நெருக்கடி நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தொற்று இனம்,மதம் பாராமல் அனைவருக்கும் தொற்றுகிறது.எனவே இவ்வாறான பின்னணியில் இறப்பவர்களை புதைப்பதா, எரிப்பதா என சுகாதார அதிகாரிகளின் தீர்மானத்துக்கு அமையவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறைந்தது பௌத்தர்கள் என்ற ரீதியில் எமது மத அனுஷ்டானங்களை செய்யக்கூட முடியாமல் உள்ளது.ஆனால் இந்த நிலை எங்களுக்கு நன்கு புரியும்.

எனவே இப்போதைய சூழ்நிலையில் இனவாத மதவாதிகளின் சில அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியாமல் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப்படி செயற்படுவது சிறந்தது எனக் கூறினார்.