ஹட்டனில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

ஹட்டன் தும்புருகிரிய பகுதியில் மேலும் இருவருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விருவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

\
தும்புருகிரிய பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 4ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.இதனையடுத்து அவருடன் தொடர்பை பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.குடும்ப உறுப்பினர்களிடம் 4ஆம் திகதி பிசி ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றிரவு வெளியான நிலையில் குறித்த பெண்ணின் கணவனுக்கும் மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த பெண்ணின் கணவர் ஹட்டன் நகரில் மரண வீடு ஒன்றுக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய தகவல்களை வழங்க வேண்டுமெனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.


சில பகுதிகளில் மக்கள் தகவல்களை மறைக்கும் விதத்திலும்,மாறுபட்ட தகவல்களை வழங்கும் நிலைமையும் காணப்படுகின்றது.அவ்வாறு அல்லாது பொறுப்புடனும் பொதுநலன் கருதியும் செயற்பட வேண்டிய தருணமிது எனவே கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் மக்கள் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஹட்டன் பகுதிகளில் இதுவரை 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.