தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர்தின நினைவேந்தலை பொதுவெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது.அதை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது மக்கள் ஒன்று கூடுவது தொடர்பில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்படி நடைமுறைகளை மீறி ஏனையோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பொதுவெளியில் எவராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவு கூறுவதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம்.
ஆனால் பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்தவர்களை அதுவும் பொதுவெளியில் குழுக்களாக இணைந்து நினைவுகூர்வது ஏற்புடைய நடவடிக்கையாக இருக்காது.உலகில் எந்த ஒரு நாடும் இதற்கு அனுமதி வழங்காது.
எனவே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு புத்துயிர் கொடுக்கும் வகையிலும் அவ்வமைப்புக்கு பரப்புரை செய்யும் நோக்கிலும் பொதுவெளியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுமானால் சுகாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.