கொழும்பிலிருந்து தீபாவளிக்கு மலையகம் வரவேண்டாம்-மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி

கொழும்பு மற்றும் கம்பஹா உட்பட கொரோனா அபாய வளையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து தீபாவளி பண்டிகைக்காக மலையகத்துக்கு வருகை தருவதை இம்முறை தவிர்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு வரும் பட்சத்தில் முழு குடும்பத்தையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டி ஏற்படும் என்று மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிப்பிள்ளை சந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றுவரை(07.11.2020)  மொத்தமாக 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிப்பிள்ளை சந்திரராஜன் கூறியதாவது,

மஸ்கெலியா எம்.ஓ.எச் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரையில் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் 7 பேருக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.இவர்கள் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி பரவலுடன்
தொடர்புபட்டவர்கள்.

அதேவேளை எமது மலையக மக்களில் சிலர் கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் முதலாளிகளாக இருக்கின்றனர். தொழில் புரிபவர்களும் இருக்கின்றனர்.அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலையகத்துக்கு குறிப்பாக நகர பகுதிகளிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் உள்ள தமது வீடுகளுக்கு வருவதற்கு முயற்சிக்கக்கூடும்.

ஆனால் கொழும்பு கம்பஹா உட்பட கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுள்ள மாவட்டங்களிலிருந்து மலையகத்துக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு மக்களிடம் வேண்டிக்கொள்கின்றோம். அவர்கள் வருகை தருவதன் மூலம் உறவினர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.அது மட்டுமல்ல அவர்கள் அவ்வாறு வந்தாலும் இங்கு வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.சிறிய வீடுகள் என்பதால் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டி ஏற்படும்.

எனவே தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே இம்முறை சுகாதார பாதுகாப்புடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் கூறியுள்ளார்.