கொரோனா தொற்று அறிகுறி தென்படாத தொற்றாளர்களிடம் இருந்து அதிகளவில் வைரஸ் பரவும் ஆபத்து!

நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து நிலை உயர்மட்டத்தில் காணப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்படும் நோயாளர்களில் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதில்லை என்றும் இவர்களின் அறியாமையே மற்றொருவருக்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாகவும் தொற்றுநோயியல்  பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய்கள் பிரிவின் விசேட வைத்தியர் மேலும் தெரிவிக்கையில் தற்போது இவ்வாறான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் பயணங்களை வரையறுத்து தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளில் தனிமைப்படுத்தலுக்காக ஈடுபடுத்தப்படும் நபர்களின் தனிமைப்படுத்தல் எவ்வாறு இடம்பெறவேண்டும் என்ற விடயம் தொடர்பிலும் விசேட வைத்தியர் தெளிவுபடுத்தினார்.

வயதானவர் மற்றும் தொற்று நோய் உள்ளவர்கள் வீடுகளிலேயே இருக்குமாறும், வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் தமது தேவைகளுக்காக வெளியில் செல்வது பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாராவது நபர் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டால் அந்த வீட்டில் ஏனைய உறுப்பினர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது முக்கியமான விடயமாகும் என்றும் கூறினார்.

இதேவேளை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் குடும்பங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய சரியான சுகாதார நடைமுறை பற்றியும் அவர் தெளிவுபடுத்தினார்.