பெருந்தோட்ட பகுதிகளுக்கு வருகை தந்த வாகனங்களும் அதில் பயணித்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்!

மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாய வளையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மலையக பெருந்தோட்டங்களுக்கு இன்று(09.11.2020) வருகை தந்த வாகனங்களும் அதில் பயணித்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.




மேல் மாகாணத்திலும் நாட்டில் ஏனைய சில பகுதிகளிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது.எனினும் வெளி மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

அதேபோல் மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் பரவக்கூடிய பகுதிகளில் உள்ளவர்கள் தீபாவளி பண்டிகைக்காக மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு வருகை தரவேண்டாம் எனவும், அவ்வாறு வந்தால் குடும்பத்தோடு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


இந்தநிலையில் வெளியிடங்களில் இருந்து மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு வருபவர்களை தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து கூட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல,கலுகல பகுதியிலும் ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகத்தொழுவ பகுதியிலும் விசேட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வீதிகள் ஊடாக வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும்.இந்நிலையில் அனாவசியமான முறையில் பெருந்தோட்ட பகுதிகளுக்கு இன்று செல்ல முற்பட்ட வாகனங்களும் அதில் பயணித்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அத்துடன்,வருபவர்கள் தொடர்பான தகவல்களும திரட்டப்படுகின்றன.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருபவர்களை அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.