காத்தான்குடியில் பாரிய அனர்த்தம்; தீக்கிரையாகிய பல கோடி மதிப்புள்ள பொருட்கள்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பலகோடி பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியது.


இன்று காலை 10 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீயை கட்டுப்படுத்த பொலிஸாரும் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினரும் பாரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையமான குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு முகவர் நிலையமுமாகும்.மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான பாதையை மூடிய பொலிஸார் போக்குவரத்துக்கு மாற்று வழிகளை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.