சனத் ஜெயசூரியவுக்கு ஐ.சி.சியினால் விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட தடை முடிவுக்கு வந்துள்ளதை சனத் ஜெயசூரிய உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தத்தடை முடிவுக்கு வந்ததையடுத்து மீண்டும் கிரிக்கெட் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான தகுதி சனத் ஜயசூரியவிற்கு கிடைத்துள்ளது.

சனத் ஜெயசூரியவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மோசடி தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவரது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசியை கையளிக்க தவறியதால் அவருக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் நிபந்தனைகளை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.

தடை முடிவுக்கு வந்துள்ளமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

'நான் ஒப்புக்கொண்ட தடைக்கான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்,எனது தகுதியற்ற காலம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மோசடி தடுப்பு பிரிவு எனக்கு தெரியப்படுத்தியதை நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றேன். எனவே இப்போது கிரிக்கெட் விளையாட்டில் பங்குபற்றவோ அல்லது ஈடுபடவோ எனக்கு மீள் தகுதி கிடைத்துள்ளது'.

'எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் நான் எப்போதும் நேர்மையை கடைப்பிடித்து வந்துள்ளேன் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். நான் எப்போதும் எனது நாட்டுக்கு முதலிடம் அளித்துள்ளேன் என்பதற்கு கிரிக்கெட்டை நேசிக்கும் பொதுமக்கள்தான் சிறந்த சாட்சி'.

'இந்தக்காலம் முழுவதும் எனக்கு ஆதரவளித்த இலங்கை மக்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பதுடன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.இந்த கடினமான காலத்தில் நீங்கள் எனக்கு மிகுந்த பலமாக இருந்தீர்கள்'.

'இவ்விடயத்தில் எனக்கு ஒத்துழைப்பு நல்கிய ஐசிசியின் மோசடி தடுப்பு பிரிவுக்கு நான் நன்றி கூறுகின்றேன்.எனது சட்டத்தரணிகளான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, சட்டத்தரணி விஷ்வா டி லிவேரா தென்னகோன் ஆகியோர் எனக்கு வழங்கிய சேவைகளுக்காக எனது பாராட்டுகளை தெரிவிக்கின்றேன்' என குறிப்பிட்டுள்ளார்