இலங்கையில் மோசமான முறையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு!

  


இலங்கையில் கடந்த சில தினங்களாக காற்று மாசுபாடு எதிர்பாராத அளவு மோசமான வகையில் அதிகரித்துள்ளதாகவும் அதிலும் குறிப்பாக கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி முதல் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்(NBRO) தெரிவித்துள்ளது.

 

இலங்கையின் தென் பகுதியை தவிர பெரும்பாலான பகுதிகளில் இவ்வாறு காற்று மாசடைதல் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

கொழும்பு,கண்டி,புத்தளம், வவுனியா,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் வளி மாசடைதல் அதிகரித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதனால் வாகன போக்குவரத்து குறைந்துள்ள நிலையில் தற்போது காற்று மாசு அடையும் விகிதம் குறைந்து இருக்க வேண்டும் என்றாலும் மாறாக தற்போது காற்று மாசு அதிகரித்து வருவது கவலை அளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 நாட்டை சூழ்ந்துள்ள பகுதிகளில் கடும் காற்றுடனான வானிலை காணப்படுவதால் நாட்டில் தற்போது காற்று மாசுபாடு அதிகரித்து இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாகவும் இலங்கையில் வலிமண்டல எல்லைப் பகுதியில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

 

இந்த காற்று மாசு காரணமாக குழந்தைகள்,முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள்,சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம் என்றும் ஏனையோருக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காற்று மாசு காரணமாக ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும் சுகாதார பிரச்சினைகள் ஏற்படாது இருப்பதற்கு தொடர்ச்சியாக முக கவசத்தை அணியுமாறு இலங்கை சுகாதாரதுறை கோரிக்கை விடுத்துள்ளது.