25 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இறம்பொடை புது பிரிவு மக்கள் !!!

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட, 1995 க்கு முன்பாக தேயிலை தோட்டமாக காணப்பட்ட பிரதேசம் தான் இறம்பொடை புது பிரிவு தோட்டம்.சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தோட்ட நிர்வாகத்தால் கைவிடப்பட்ட நிலையில் அங்குள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக அறிய முடிகின்றது.

கிடைக்கின்ற சிறு சிறு தொழில்களை செய்து மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் வாழ்ந்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. அங்குள்ள மக்களிடம் வினவியபோது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இவைதான்,

சுமார் 25 வருடகாலமாக ஒரு நிரந்தர தொழில் வாய்ப்பின்றி கூலி வேலை செய்து அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்குள்ள இளைஞர்களும் பெரும்பாலும் வேலை வாய்ப்பின்றி காணப்படுகின்றனர். தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக இவர்களின் வாழ்க்கை மேலும் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் அங்குள்ள மாணவர்கள் பாடசாலை செல்ல வேண்டும் எனறால் சீரான பாதை வசதிகள் இல்லை எனவும் இருக்கின்ற பாதைகளும் மிகவும் ஆபத்து நிறைந்ததாகவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு காணப்படுவதாக அங்குள்ள மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் மருத்துவ தேவைகளுக்காக இவர்கள் வெகுதூரம் செல்ல வேண்டிய தேவையும் உள்ளது.இது பற்றி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நோயாளிகளை நாற்காலிகளில் அமர வைத்து தூக்கி செல்கின்ற அவல நிலை தான் தற்போதும் உள்ளதாக கூறியுள்ளார்.

குறிப்பிட்ட கிராமத்தில் 250க்கும் அதிகமானோர் வசித்து வருவதாக அறிய முடிகின்றது. மேலும் வேலைவாய்ப்பு இன்றி காணப்படும் இளைஞர்கள் தரிசு நிலங்களை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தனிக்கும் போது சில தனிப்பட்ட நபர்களினால் அவர்களுக்கு இடையூறு விளைவிக்கபடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


ஆகவே இந்த மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதோடு மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிகள் செய்து தரப்படவேண்டும்.மேலும் அந்த பகுதிக்கான போக்குவரத்து மற்றும் மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை உரிய அதிகாரிகள் செய்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கையர்கள் என்ற வகையில் மனிதாபிமானத்தோடு இவர்களின் துன்பங்களைக் களைவதற்காக இந்த விடயங்களை உரிய அதிகாரிகளுக்கு சென்றடையும் வரை பகிர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.