Friday, October 9, 2020

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை துணைவேந்தர் உள்ளிட்டோர் தாக்கியதாக குற்றச்சாட்டு.

யாழ்.பல்கலைக்கழக இரண்டாம் வருட  மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற தர்க்கம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்து தர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


நேற்று(8) மாலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் தர்க்கம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தை நாடி தர்க்கத்தை சுமுகமாக தீர்க்க முயன்றபோது துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளர்கள், காவலாளி ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதுடன், துணைவேந்தரால் தாக்கப்பட்ட மாணவன் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக வாயிலில் போராட்டம் நடத்திய மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பல்கலைக்கழகத்திற்குள் அதிரடிப்படை மற்றும் பொலிஸாரை இறங்கி அடிப்போம், சுடுவோம் என துணைவேந்தர் அச்சுறுத்தியதாகவும் அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் கூறி இருக்கின்றனர்.

மேலும் விரிவுரையாளர்கள் பரிட்சையில் புள்ளியிட மாட்டோம் எனவும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றுவோம் எனவும் அச்சுறுத்தியதாக கூறும் மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களை அடிப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது காட்டுமிராண்டிகள் போல் மாணவர்களுடன் நடந்து கொண்ட அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இச்சம்பவத்தை அடுத்து யாழ்.பல்கலைக்கழக சூழலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இன்று(9) மாலை 3 மணியளவில் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் தவிர்ந்த பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் மூலம் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீ சற்குணராஜா உறுதியளித்ததன் பிரகாரம் மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!