Friday, October 23, 2020

ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் அதிரடி தீர்மானங்கள்



நவம்பர் 14ஆம் 15ஆம் திகதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கின்றது.


இந்நிலையில் ஹட்டன்-டிக்கோயா நகரசபையில் அதிரடியான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


 நகரசபைக்கு உட்பட்ட எல்லைப்பகுதியில் அங்காடி வியாபாரம் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது 


வெளி பிரதேச வியாபாரிகள் நகரசபை எல்லைப் பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி இல்லை என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 நகரசபை தலைவர் சடையன் பாலச்சந்திரன் தலைமையில் நகரசபை மண்டபத்தில் இன்று(23) நடைபெற்ற மாதாந்த சபை அமர்வில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது


 கொரோனா தொற்றிலிருந்து நகர மக்களையும் நகருக்கு வருவோரையும் பாதுகாக்க வேண்டும்.ஆகவே தீபாவளி பண்டிகைக்கு வருடாந்தம் அங்காடி வியாபாரம் செய்ய அனுமதி வழங்காது நகர வர்த்தக நிலையங்களிலும் covid-19 சுகாதார நடைமுறையை பேணி வர்த்தக நடவடிக்கைகளை  முன்னெடுக்க வேண்டும் என இங்கு கலந்துரையாடப்பட்டது.


 அதேபோல தீபாவளி பண்டிகைக்கு கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதரும் பெருந்தோட்ட இளைஞர் யுவதிகள் நகருக்குள் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் தீபாவளி தினங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


 இந்த கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அனுப்பி வைப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 அத்துடன் ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது மூடப்பட்டிருக்கும் மீன் விற்பனை நிலையம் உள்ளிட்ட இறைச்சி விற்பனை நிலையங்களின் ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகளை செய்து அதன் அறிக்கை கிடைத்ததன் பின்னர் அந்த வர்த்தக நிலையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!