Tuesday, October 20, 2020

லங்கன் பிரீமியர் லீக்கில் இடம்பெறும் வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

துவண்டு போயிருந்த இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள இலங்கை பிரீமியர் லீக் எல்பிஎல் டி20 தொடரில் விளையாடும் வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

பல்வேறு தடைகளுக்கு பிறகு அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கை பிரீமியர் லீக் டி20 தொடரின் வீரர்களின் தேர்வு திங்கட்கிழமை ஆன்லைனில் நடைபெற்றது.

இந்தத் தேர்வின்போது ஐபிஜி தலைமை நிர்வாக அதிகாரி அனில் மோகன்,இலங்கை கிரிக்கெட் சபையின் துணைத் தலைவர் ரவீன் விக்ரமரத்ன,இலங்கை கிரிக்கெட் சபை தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா, உரிமையாளர்கள் மற்றும் ஒவ்வொரு அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு உரிமையாளரும் 6 சர்வதேச வீரர்களை வாங்க முடியும் அதாவது லஙகன் பிரீமியர் லீக் தொடரில் 30 சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் 65 உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.ஒவ்வொரு அணியிலும் 19 உறுப்பினர்கள் உள்ளனர்.மொத்தத்தில் 5 உரிமையாளர்களுக்கு ஏலம் எடுக்க சுமார் 150 வீரர்களின் தேர்வு இருந்தது இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வீரர்களின் தேர்வு இடம் பெற்றுள்ளது.

இந்த வீரர்களின் தேர்வின்போது 5 அணிகளுக்கான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதில் முக்கிய வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் கெயில், சயித் அப்ரிடி,டு ப்ளேஸிஸ்,ஆந்ரே ரஸ்ஸல் ஆகிய வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டனர். தற்போது ஒவ்வொரு அணிகளிலும் வாங்கப்பட்ட முக்கிய வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்.

கொழும்பு கிங்ஸ் அணியில் அஞ்சலோ மத்தியூஸ்,ஆந்ரே ரஸ்ஸல், டு பிளேஸிஸ், ஃகோனி, மன்விந்தர் பிஸ்தா, இசுரு உதான, தினேஷ் சந்திமால், அமில அபோன்ச, அசான் பிரியன்ஜன, ரவீந்தர் பல்சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.பயிற்சியாளராக டேவ் வட்மோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தம்புள்ளை ஹவ்க்ஸ் அணியில் தசுன் சானக்க,டேவிட் மில்லர் ,கார்லோஸ் பிரத்வெயிட், நிரோஷன் டிக்வெல்ல,லஹிரு குமார,ஒசேத பெர்னாண்டோ, கசுன் ராஜிதஉள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளராக ஜோன் லூயிஸ்  நியமிக்கப்பட்டுள்ளார்.

காலி கிளேடியேட்டர்ஸ் அணியில் லசித் மாலிங்க,சயிட் அப்ரிடி, கொலின் டி இங்கிரம் க்ஷ,ஹஸ்ரதுல்லா சஷாய், மொகமட் ஆமிர்,தசுன் குணதிலக்க, பானுக ராஜபக்ச,அகில தனஞ்சய,மிலிந்த சிறிவர்தன சப்ராஸ் அஹமட் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் பயிற்சியாளராக மொயின் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியில் திஸர பெரேரா,டாவிட் மாலன், வனிந்து ஹசரங்க,சோயிப் மாலிக்,உஸ்மான் ஷின்வரி,அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சுரங்க லக்மால்,பினுர பெர்னான்டோ உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கண்டி டஸ்கர்ஸ் அணியில் குசல் பெரேரா,கிறிஸ் கெயில்,லியாம் பிளங்கெட்,வஹாப் ரியாஸ், குசல் மெண்டிஸ், நுவான் பிரதீப், சிக்குகே பிரசன்ன, அசேல குணரத்ன,நவினுல் ஹக் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் பயிற்சியாளராக அசான் திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிக்கு பிறகு இன்னும் சில வெளிநாட்டு வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் போட்டியின்போது நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஓரணியில் அனுமதிக்கப்படுவார்கள்.

முன்னதாக லங்கன் பிரீமியர் லீக் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை அரசு உத்தரவிட்டதால் ஒத்திவைக்கப்பட்டது .


இந்நிலையில் இந்த முறை வெளிநாட்டு வீரர்கள் ஏழு நாட்களுக்கு மட்டும் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் இலங்கை கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது இதற்கு அரசாங்கம் அனுமதியும் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து தற்போது நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலுள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் அம்பாந்தோட்டை ஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!