Thursday, October 15, 2020

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடும் தண்டனை அறிவிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை பரிந்துரைத்துள்ளது.


புதிய துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறி சற்குணராஜா பதவி ஏற்ற பின்னர் பல்கலைகழகத்தில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவற்காக விரைவு பொறிமுறை அறிமுகப்படுத்தப் பட்டிருந்த நிலையில் குற்றம் இடம்பெற்று ஒரு மாத காலத்திற்குள் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுக் சபையின் பரிந்துரை பிரகாரம் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையை சேர்ந்த மூன்றாம் வருட மாணவர்கள் நான்கு பேருக்கு ஒரு கல்வி ஆண்டு காலம் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதுடன் பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றிய பதவி நிலைகளை வகிக்க முடியாத வகையிலான தடை உத்தரவு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கி இருப்பது கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறி சற்குணராஜாவுக்கு பரிந்துரை செய்துள்ளது.அத்துடன் குற்றத்தின் பாரதூரத்தன்மை கருதி மாணவி ஒருவருக்கு எச்சரிக்கையுடனான விலக்களிப்பு க்கும் பரிந்துரைககப்பட்டுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் சித்த மருத்துவத்துறை மாணவர்களுக்கான தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டது.இனிவரும் காலத்தில் இதே பொறிமுறையில் பகிடிவதையில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து கற்றல் நடவடிக்கைகளுக்கான தடை,சிறப்பு துறைகளுக்கான தடை,முதலாம் இரண்டாம் வகுப்பு சித்திக்கான தகைமை இழப்பு, மகாபொல மற்றும் நிதி உதவிகளை தடைசெய்தல்,பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றிய பதவி நிலைகளை வகுக்க முடியாத வகையிலான தடை உத்தரவு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கியிருந்து கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்படல் உட்பட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து பல்கலைக்கழக மாணவர் பதிவு இரத்து செய்யப்பட வேண்டுமெனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!