Monday, September 21, 2020

படகின் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள் பறிமுதல்-மூவர் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள்,மஞ்சள் அடங்கிய 22 மூட்டைகளை நடுக்கடலில் பறிமுதல் செய்து மீனவர்களையும் மெரைன் பொலிஸார் கைது செய்தனர்.

பாம்பன் பாலம் கடல் வழியாக வெளிமாவட்ட படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குந்துகால் கடற்கரையில் இன்று காலை முதல் ரோந்து பணியில் பொலிஸார் ஈடுபட்டனர்.

அப்போது பாம்பன் குந்துகால் கடலில் பைபர் நாட்டு படகு ஒன்று இயந்திரப் பழுதாகி நின்று கொண்டிருந்தது.ரோந்து பணியில் இருந்த பொலிஸார் படகில் உள்ள மீனவர்களிடம் விசாரணை நடத்தியதில் மீனவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.இதனால் சந்தேகம் அடைந்த பொலிஸார் பரிசோதனை செய்தபோது படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக 22 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் ஆகியவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர் மீனவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் இந்த படகில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகளும் சமையல் மஞ்சளும் கடத்திச் செல்வதற்காக படகில் எடுத்து சென்றபோது நடுவழியில் என்ஜின் பழுது காரணமாக கடலில் தத்தளித்து நின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து படகில் இருந்த தூத்துக்குடி லூர்தம்மாள் புறத்தை சார்ந்த மலையாண்டி ,தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் பெலதீன் ஆகிய மூன்று மீனவர்களை கைது செய்த பொலிஸார் படகு மற்றும் அதில் இருந்த கடல் அட்டைகள்,சமையல் மஞ்சள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.22 மூட்டைகளில் சுமார் 800 கிலோ கடல் அட்டைகள் 400 கிலோ மஞ்சள் இருந்ததாக துணை ஆய்வாளர் கனகராஜ் தெரிவித்தார்.

மேலும் கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சளின் சர்வதேச மதிப்பு சுமார் 20 லட்சம் இருக்கலாம் என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!