Wednesday, September 30, 2020

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஒரே கொள்கையின் கீழ் அரசாங்கம் இருக்கின்றது.அதில் தனக்கென தனியொரு கொள்கை இல்லை என பதில் அளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒவ்வொரு கட்சிக்கும் அதில் இருக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் தனித் தனிக் கொள்கைகள் இருக்கலாம். அவற்றை எல்லாம் ஓரிடத்தில் குவிப்பதே முக்கியம். இருபதை ஆராய்வதற்காக நான் அமைத்த குழு அறிக்கையை அளித்துள்ளது.அது எனக்கு கையளிக்கப்பட்ட தனிப்பட்ட அறிக்கையாகும் என்றார்.


பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உங்களுடன் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்பு கலந்துரையாடலின்போது வலியுறுத்தியுள்ளார்.ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மறுத்துள்ளார். அவ்வாறே வலியுறுத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இதில் எது உண்மை என எழுப்பிய கேள்விக்கு "மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை" என பிரதமர் பதில் அளித்தார்.

"வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நாங்கள் தான் நடத்தினோம்"."நேரம் வரும்போது சகல மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவோம்" எனவும் பிரதமர் மஹிந்த கூறியபோது "அரசமைப்பு அமுல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம்" என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறுக்கிட்டு பதிலளித்துள்ளார்.


ஊடகங்களின் பிரதம ஆசிரியர்கள் உடனான சந்திப்பு,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல,உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, டக்ளஸ் தேவானந்தா,இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் சகிதம் அலரிமாளிகையில் நேற்று(29) காலை நடைபெற்றது.

இதன்போது "ஞாபகம் இல்லை","அவதானம் செலுத்துகின்றோம்","எனக்குரியது" ,"தேவையில்லை"என ஒரே ஒரு வார்த்தைகளில் பல கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர்,தேங்காய் வாங்குவதற்கு அளவு நாடா கொண்டு செல்ல வேண்டுமா எனக் கேட்ட போது திகைத்து நின்றார்.அப்போது அருகில் இருந்த அமைச்சர்கள் தெளிவுபடுத்தினர்.குண்டு பிரதானமாக இருந்த காலம் போய் தற்போது தேங்காய் பிரதானமாக இருக்கின்றது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இருபதாவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக பிரதமருக்கான அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது என கேட்டமைக்கு பதிலளித்த அவர் "இங்கு பிரதமர் யார் என்பது பிரச்சினை இல்லை. அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போகிறேன் என்று கூறப்படுவதிலும் உண்மை இல்லை.நான் ஓய்வு பெற மாட்டேன்.அரசியல்வாதிகள் எப்போது ஓய்வு பெற்றனர்"? என வினவினார்.

புதிய அரசமைப்புக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.கடந்த பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளது. ஒன்றிரண்டு போதாமல் போகலாம் என தெரிவித்த அவர் பதவிக்கு ஆசைப்படும் எம்.பிக்கள் தற்போது இல்லை எனவும் கூறினார்.

தேங்காய்களின் அளவுக்கேற்ப விலைகளை நிர்ணயம் செய்தமை மக்களிடத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டி பிரதம ஆசிரியர்கள், தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.அத்துடன் வர்த்தமானி அறிவித்தலை திருத்துவதில் பெயர் பெற்றிருக்கும் இந்த அரசாங்கம் தேங்காய்க்கான வர்த்தமானியையும் திருத்துமா? என வினவினார்.

"தேங்காய்" கேள்விகளால் ஒரு கணம் திகைத்துப் போன பிரதமர் மஹிந்த, விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்ட போது குறுக்கிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தேங்காய்க்கான வர்த்தமானி அமைச்சுக்குரியது அல்ல அது நுகர்வோர் அதிகார சபைக்குரியது.சந்தைகளுக்கு செல்பவர்கள் தேங்காய்களின் அளவை பார்க்க மாட்டார்கள்.குவியல்களை பார்த்தே தேங்காய்களை விலைக்கு வாங்குவார்கள் என்றார்.

ஒரே நோக்கத்தில் பயணித்தால் 20வெற்றி கொள்வது இலகுவானது.கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் இடையில் கொள்கைகள் வேறுபடும்.இன்னும் சிலர் வாயை திறக்காமலேயே இருக்கின்றனர்.20 நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.அதில் எந்த சந்தேகமும் இல்லை என பதில் அளித்த பிரதமர் வர்த்தமானியை திருத்துவது ஜனநாயகம் என்றார்.

மஞ்சளுக்கு தட்டுபாடு இருப்பதை ஏற்றுக்கொண்டவர் துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள், சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்படும் மஞ்சள் ஆகியன அரசுடமையாக்கபடுகின்றன. எனினும் அவை யாவும் எக்காரணம் கொண்டும் சந்தைக்கு கொண்டுவரப்படாது என்று கூறினார்.

மஞ்சளை வளர்ப்பதற்கு உள்ளூர் விவசாயிகளுக்கு படுத்தப் படுவர் மஞ்சளை உற்பத்தி செய்வது பிரச்சனை தான் ஆனாலும் பிரச்சினைக்கு மத்தியில் தான் முன்னோக்கி பயணிக்க வேண்டும் எனக் கூறிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மஞ்சள் இறக்குமதிக்கான அனுமதி எக்காரணம் கொண்டும் வழங்கப்பட மாட்டாது என்றார்.

பொருளாதாரப் பிரச்சனைகளால் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.2021 வரவு செலவுத்திட்டத்தில் பாதீடு,மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் பாதீடு ஓர் இரகசியமாகும்.அதை பற்றி கூறினால் நாளைக்கே எழுதி விடுவீர்கள்.பேசப்பட்ட விடயங்கள் மறந்து விடும் எனத் தெரிவித்ததோடு ஒவ்வொரு வாக்காளர் பிரிவுகளிலும் 100 வீடுகளைக் கொண்ட மாடி வீட்டுத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!