Monday, September 7, 2020

சுகாதாரம், கல்வி போன்ற சேவைகள் மத்திய அரசின் கீழ்

கொவிட் – 19 நோய்த் தொற்று எமக்கு கற்றுத் தருகின்ற ஒரு பாடமாக மத்திய அரச சுகாதார சேவை கட்டமைப்பு ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தீர்மானமிக்க தேவை அமைந்துள்ளது என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல்வேறு வைத்தியசாலைகள் மாகாண சபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்தாலும் கூட, பெரும் சுகாதார பிரச்சினைகளின் போது பயன்படுத்தக்கூடிய வகையில் நாடு முழுவதும் இருக்கின்ற பல்வேறு வைத்தியசாலைகள் மத்திய சுகாதார அமைச்சின் கீழேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சுகாதார சேவை முழுமையாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் கொவிட் -19 நோய்த் தொற்றுக்கு இலங்கை முகங்கொடுத்த போது, அதனை நாம் எதிர்கொண்ட செயற்திறன் வேறு விதமாக குறைவானதாக அமைந்திருக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட சில துறைசார் நடவடிக்கைகள் மத்திய அரசின் தலைமைத்துவப் பொறுப்பின் கீழ், மத்திய அரசிற்குப் பொறுப்புக் கூறத் தக்கவையாகச் செயற்படுத்தப்பட வேண்டும் என்பது அண்மைய அனுபவங்களின் மூலம் உணரப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது எனவும் சுகாதாரம் போன்றே, கல்வியும், அது போன்று அடையாளம்படுத்தப்படக்கூடிய இன்னுமொரு துறையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

களனி பொல்லேகல, மானெல்வத்த நாகானந்த சர்வதேச பௌத்த கல்வி நிலையத்தில் நேற்று முன்தினம் “சிறந்த உள்வாரி வதிவிடவாளர்” பயிற்சி பட்டறையில் ஆரம்ப உரை நிகழ்த்தும்போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பயிற்சி நெறிக்கு வதிவிட பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த புதிய இளம் வைத்தியர்கள் 680 பேர் கலந்துகொண்டனர்.

இது, இவ்வாறன நிகழ்ச்சித்தொடரின் 08வது நிகழ்ச்சியாகும். அங்கு நூற்றுக்கும் அதிகமான பேராசிரியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் அவர்களுக்கு பயிற்சியளிப்பர். 
ஜனாதிபதி தனது உரையின் ஆரம்பத்திலேயே “கொவிட் - 19 நோய்த் தொற்றை வெற்றிகரமாக நாம் கட்டுப்படுத்த முடிந்தமைக்கு காரணம் அரசாங்கத்தின் பல்வேறு பிரிவினர் மேற்கொண்ட தீர்மானமிக்க மற்றும் உடனடி நடவடிக்கைகளோடு, எமது சுகாதார சேவையாளர்களின் உன்னத அர்ப்பணிப்பும் ஆகும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த முயற்சிக்கு பங்களித்த அனைத்து சுகாதார சேவையாளர்களுக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். 

“உலகின் பல்வேறு அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கும் கூட வெற்றிகரமாக இந்த நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியாமலே உள்ளது. தாமதித்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பொது சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பின்மை என்பன இவற்றுக்கான முதன்மைக் காரணங்களாகும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“முன்-தயார்நிலை இல்லாமை, போதுமானளவு பரிசோதனைகளைச் செய்யாமை என்பன இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியது எனவும் இதன் பிரதிபலனாக தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் மரணித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது எனவும் ஆனால், நாங்களோ, மருத்துவமனைகளுக்கு வந்த கொவிட் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்று சந்தேகித்த எந்தவொரு நோயாளியையும் வீட்டுக்கு திருப்பி அனுப்பியுருக்கவில்லை.”எனவும் கூறியுள்ளார்.

“உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள், மற்றும் பல்வேறு நாடுகள் நாம் அடைந்த வெற்றியை பாராட்டுகின்றன. எனவேதான் - அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடாக இருந்தாலும் இலங்கை இவ்வாறான வெற்றியை அடைந்துகொள்வதற்கு எமது இலவச சுகாதார கட்டமைப்பே காரணமாக அமைந்தது என்பதையிட்டு நாம் பெருமை கொள்ள வேண்டும்” என்பதனையும் அவர் தனது  உரையில் குறிப்பிட்டுள்ளார். 

“கொவிட் – 19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தியதன் மூலம் - இலங்கையின் மத்திய பொது சுகாதாரச் சேவை கட்டமைப்பின் பலம் எடுத்துக்காட்டப்படுகின்றது எனவும் இவ்வாறான நிலையின்போது, எமது நாட்டில் பலர், மத்திய அரசிற்கு வெளியில் இருந்து வழங்கப்படும் ஒரு சேவையை எதிர்பார்க்கும் நோக்கம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.” எனவும் கூறியுள்ளார்.

மத்திய அரச சுகாதாரச் சேவை கட்டமைப்பை மென்மேலும் பலப்படுத்த வேண்டியது அவசியமானது என்பது தொடர்பில் எமக்கு எந்தவொரு ஐயமும் இல்லை. அரசாங்கத்தின் நிதியங்கள் பொது சுகாதார சேவையின் அபிவிருத்திக்காகச் செலவிடப்படுகின்ற புத்தாக்க முன்னெடுப்புக்களுக்கான காலம் தோன்றியுள்ளது. அவ்வாறன செயல்முறைகளின் இறுதி பிரதிபலன் நாட்டின் குடிமக்களையே சென்றடையும் என்பதனையும் ஜனாதிபதி நினைவூட்டினார். 

ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அரசாங்கத்திற்கு பெரும் ஆணையை வழங்கினார்கள். அபிவிருத்தி தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்புடனேயே அந்த ஆணையை மக்கள் வழங்கினார்கள் என்பது தெளிவானது எனவும் அபிவிருத்தியின் அடிப்படைகளில் ஒன்று சுகதேகியான குடிமக்களாகும் எனவும் உறுதியான பொதுச் சுகாதார இலக்குகளை அடைந்துகொள்வது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும் எனவும் தனது பொறுப்புக் காலத்தினுள் சுகதேகியான குடிமக்களை உருவாக்குவதற்காக தான் உறுதிப்பூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர் ஒருவரை சந்திப்பதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ள நிலையில் கிராமிய மக்கள் உள்ளார்கள் எனவும் இயல்பான, நடைமுறை ரீதியிலான சாத்தியங்களை ஆராய்ந்து, இத்தகைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தம்மால் முடியும் எனவும் புதிய செயற்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு காலம் எழுந்துள்ளதாகவும் சுகாதார சேவை வசதிகள் போதுமானளவில் இல்லாத கிராமங்களுக்குச் சுகாதார சேவைகளை வழங்குவதற்குப் பொதுச் சுகாதார தாதியர்மார் பங்களிக்க முடியும் எனவும் கிராமிய மருந்தகங்களை மீண்டும் செயற்படுத்துவதே இதற்கான இன்னுமொரு தீர்வாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வைத்தியத்துறையானது, ஒருவர் இணையக்கூடிய உன்னதமான ஒரு தெய்வீகப் பணி ஆகும். தம்மை நாடி வரும் நோயாளர்களின் வாழ்க்கை தொடர்பாக வைத்தியர்களிடம் பாரிய பொறுப்பு உள்ளது. சேவை நாடி வரும் ஒருவரின் வாழ்க்கை அல்லது மரணம் என்ற தீர்மானத்தை எடுப்பது வைத்தியர்களின் முடிவுகளின் பிரகாரமே அமைகின்றது. அதனால் உங்களுக்கு உரித்தாகின்ற பொறுப்பை தயவுசெய்து யாரும் சிறுமைப்படுத்தி மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதனையும் அங்கு கூடியிருந்த இளம் வைத்திய பட்டதாரிகளுக்கு ஜனாதிபதி நினைவூட்டினார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க மற்றும் சுகாதார அதிகாரிகள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அனுருத்த பாதினிய உள்ளிட்ட சங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் சுகாதார ஆய்வுகள் மற்றும் புத்தாக்க சங்கத்தின் அதிகாரிகள் ஆகியோருடன் வேறு பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!