அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு கடும் விஷத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் சனிக்கிழமையன்று ஊடக சந்திப்பில் கூறியதாவது இந்த சம்பவம் இந்த வாரத் துவக்கத்தில் நடந்துள்ளது."ரிசின்"என்ற ஒருவகையான கடுமையான விஷத்தை கொண்ட கடிதம் ஒன்று வெள்ளை மாளிகையின் கடிதங்கள் சோதனை பிரிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது FBI மற்றும் இரகசிய பிரிவு போலீசார் இந்த கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.அனேகமாக கனடாவிலிருந்து அந்த கடிதம் அனுப்பப்பட்டு இருக்கக்கூடும் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக கனடிய போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.தற்போது பொதுமக்களுக்கு இதனால் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆமணக்கு விதையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த "ரிசின்" என்ற விஷத்தினை உட்கொண்டால் தலைசுற்றல் ,வாந்தி ,மயக்கம் என ஏற்பட்டு இறுதியில் உள்ளுறுப்புக்கள் செயலிழந்து மரணம் சம்பவிக்கும்.அதேசமயம் இதற்கான வலிமையான முறிமருந்து எதுவும் தற்போது கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.