பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல்..! அமுலுக்கு வரும் புதிய வீதி ஒழுங்குச் சட்டம்.


கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த பேருந்து முன்னுரிமைச் சட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

4 பிரதான வீதிகளை மையப்படுத்தி இந்த செயற்பாடு அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமுல்படுத்தப்படுகின்ற வீதி ஒழுங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்காத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், வீதி ஒழுங்குச் சட்டம் காரணமாக கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள பிரதான வீதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற சுற்றுவட்டம் மற்றும் டி.எஸ்.சேனநாயக்க சந்தி வரையில் இவ்வாறு வாகன போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல, பேலியகொடை மற்றும் களனி பாலத்திற்கு அருகில் கொழும்பு-கண்டி வீதியிலும் நுகேகொடையிலிருந்து ஹைலெவல் வீதியிலும் இவ்வாறு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல தெஹிவனை மற்றும் கொஹூவளையிலிருந்து காலி வீதிக்கு பிரவேசிக்கும் பகுதிகளிலும் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.