அங்கொட லொக்காவின் மரணத்திற்கான காரணம் வௌியானது!


இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த அங்கொட லொக்கா, தமிழகத்தில் உள்ள கோவை நகரில் ஜூலை மாதம் உயிரிழந்தார். அவரது பிரேத உடலை ஆய்வு செய்ததில் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மாநில காவல்துறை குற்றப்புலனாய்வு சிஐடி (சிபிசிஐடி) ஐ.ஜி சங்கர் தகவல் அளித்துள்ளார்.


அங்கொட லொக்கா உயிரிழந்த வழக்கில் சிவகாமி சுந்தரி, அம்மானி தான்ஜி, தியானேஸ்வரன் ஆகியோர் ஆகஸ்ட் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்குப் உட்படுத்தப்பட்டனர். மேலும், அங்கொட லொக்கா மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரையும் சிபிசிஐடி பொலிஸார் விசாரணை செய்ததில் அங்கொட லொக்கா கோவையில் தலைமறைவாக இருந்தபோது தனது முகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதும், உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. ஆனால், அவரின் இறப்புக்கான காரணம் குறித்த உறுதியான தகவல்கள் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக அங்கொட லொக்கா உயிரிழந்ததை சிபிசிஐடி பொலிஸார் தற்போது உறுதி செய்துள்ளனர்.

வழக்கு விசாரணை குறித்து கருத்து தெரிவித்த சிபிசிஐடி ஐ.ஜி சங்கர், ´இலங்கையில் தேடப்பட்டு வரும் அங்கொட லொக்கா கோவையில் தலைமறைவாக இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. மேலும், அவரது உடல் உறுப்புகளை இரசாயன ஆய்வுக்கு உட்படுத்தியபோது அவருக்கு விஷம் கொடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது´ என கூறினார்.

அங்கொட லொக்கா மற்றும் அமானி தான்ஜி ஆகியோரின் பெயர் மற்றும் நாட்டின் குடியுரிமையை மாற்றி மறைத்து ஆதார் அட்டை எடுக்க போலியான ஆவணங்களை அளித்தது, போலி ஆதார் அட்டையை உண்மை என்று பயன்படுத்தி ஏமாற்ற உதவியது ஆகிய குற்றங்களுக்காக கோவையில் அங்கொட லொக்காவோடு வசித்து வந்த கொழும்புவைச் சேர்ந்த 27 வயது பெண் அமானி தான்ஜி, மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி மற்றும் அவருக்கு பழக்கமுள்ள ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.