சார்ஜா மருத்துவ பல்கலைக்கழகத்தில் 20 வயது பெண்ணின் கருப்பையில் உருவான 6கிலோ கட்டியை வைத்தியர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர் .கடும் வயிற்றுவலி மற்றும் வீக்கத்துடன் 20 வயது பெண் சார்ஜா மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பெண்ணுக்கு நீண்ட காலமாக செரிமான கோளாறு மற்றும் நடப்பதில் பிரச்சனை இருந்துள்ளதாக மருத்துவமனையின் வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.
அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் ஸ்கேனில் கருப்பையில் கட்டி வளர்ச்சி அடைந்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அந்தக் கட்டியானது கருப்பை குழாயில் இருந்து வளர்ச்சியடைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக வைத்தியகுழாம் இன் ஊடாக அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
கட்டி அகற்றுவதில் மிகப்பெரிய சவாலை எதிர் கொண்டதாக பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகம்மது ஜாவீத் தெரிவித்தார் .
கட்டி மிக நெருக்கமாக கருப்பையில் உள்ளதால் கருப்பை குழாய் மற்றும் கருமுட்டை பகுதிகள் சேதமடையாமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு சேதமடைந்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக் குறியாகும் என்ற நிலையிலேயே இவ் அறுவை சிகிச்சை மிக நுட்பமான முறையில் செய்யப்பட்டு கட்டியானது அகற்றப்பட்டது என்று டாக்டர் முகமது ஜாவித் தெரிவித்தார்.