தேர்தல் முடிந்தாலும் ஜனகனின் அரசியல் பயணமும் மக்கள் சேவையும் தொடரும். -கலாநிதி வி.ஜனகன்-


2020 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் பேசும் சமூகம் அக்கறையுடன் வாக்களித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என்றும் கொழும்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் கணிசமான அளவு வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கலாநிதி.வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் பேசும் சமூகம் 70 சதவீதம் தமது வாக்கினை பதிவு செய்துள்ளமை பாராட்டதக்க விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் சுமூகமாக இடம்பெறுவதற்கும், தனக்கு ஆதரவளித்த கொழும்பு மாவட்ட பொது மக்கள், கட்சித் தலைமை, ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், "தமிழ் பேசும் மக்கள் இம்முறை முன்மாதிரியாக செயற்பட்டு வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.  அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆறு ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இருந்தபோதும் போதியளவு ஆசனங்கள் இல்லாததன் காரணமாக எங்களுக்கான ஆசனங்களை உறுதிசெய்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இருந்த போதும், கணிசமான அளவு வாக்குகளை பெறக் கூடிய வாய்ப்பினை அளித்த கொழும்பு மாவட்ட வாக்காளர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூற கடமைப்பட்டுள்ளேன்.

அதேவேளை, எனது அரசியல் பயணத்தில் கொழும்பு மாவட்டத்தில் ஓர் அரசியல் அடையாளத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பினை வழங்கிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், அந்த கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

அதேபோன்று இம்முறை எனது பயணத்தில் ஆக்கமும் ஊக்கமும் அளித்து எனக்காக உதவி செய்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதுதவிர, எனது பாடசாலை சமூகங்களும், நண்பர் வட்டங்களும், இணைப்பாளர்களும்  மிகவும் ஆக்கபூர்மாகவும், முயற்சியுடனும், புதிய எதிர்பார்ப்புடனும் இந்த பயணத்தில் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

எனது இந்த பயணம் ஒரு சிறப்பான கட்டத்திற்கு நகர்வதற்கு அவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகவும் பக்கபலமாக இருந்தன.

அதேபோன்று மிக முக்கியமாக இந்தளவுக்கு வாக்குகளை சேகரிப்பதற்கு மக்கள் மத்தியில் ஒரு அடையாளத்தினை பெற்றுக் கொள்வதற்கும் மிக ஆழமாக புதிய எதிர்பார்ப்புடன் ஒரு நல்ல நம்பிக்கையை வைத்து வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் என்னால் இயன்ற ஒத்துழைப்புகளையும், ஆதரவையும் எந்த தருணத்திலும் வழங்குவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

ஒரு தேர்தல் நிறைவடைந்திருக்கின்றது ஆனால் ஜனகனின் அரசியல் பயணம் நிறைவடையவில்லை, அந்த பயணம் தொடரும் என்ற செய்தியை இந்த தருணத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.

அத்துடன் எனது சமூகம் சார்ந்த சேவைகள் மிகவும் ஆழமாகவும், வேகமாகவும் எதிர்வரும் காலங்களிலும் இடம்பெறும்.

இதேவேளை, இம்முறை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி மூன்றில் இரண்டும் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொண்டு, பொதுமக்களின் மிக ஆழமான ஆணையை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இருந்தபோதும் கடந்த தேர்தல் காலங்களில் இனவாதம் மற்றும் மதவாதம் என்பன அதிகளவில் பேசப்பட்டிருந்தாலும், அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான மொட்டு அணியினர் இந்த வெற்றியை எதிர்காலத்தில் பிரிவினைவாதமோ அல்லது மதவாதமோ அற்ற சரியான பாதையில் செல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

இந்த நாட்டை முன்னேற்றகரமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் பொதுமக்களின் ஆணை மிக ஆழமாக வழங்கப்பட்டிருக்கின்றது.

எனவே அந்த ஆணைக்கு அமைவாக மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர் நாட்டு முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

அதேபோன்று அவர்களின் தேசியப்பட்டியலும் மிகவும் சரியான முறையில் பட்டியலிடப்பட்டுள்ளமை தெளிவாக இருக்கின்றது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்கும், ஒரு சரியான தளத்திற்கு கொண்டுவருவதற்கும் பாடுபட்டு உழைத்தவர்களை தேசியப் பட்டியலில் உள்வாங்கி இருக்கின்றமையையிட்டு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, இனிவரும் காலம் மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான காலமாக இருக்கப் போகின்றது. ஏனென்றால் இம்முறை தேர்தலின் ஊடாக 19 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களாக 29 தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

இந்தவிடயம் ஏற்கனவே இலங்கை வரலாற்றில் இடம்பெறாத ஒரு விடயமாக இருக்கின்றது.

மொத்தமாக 48 தமிழ் பேசும் உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றத்தில் இருக்கப் போகின்றார்கள். எனவே, பாராளுமன்றம் பலமாக இருக்க வேண்டும் என்பதற்கு இது சிறந்தவொரு எடுத்துக்காட்டாகவுள்ளது.

இதுவரை இடம்பெறாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியமைக்காக அனைத்து வாக்காளர்களுக்கும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசாங்கத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்களை கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்' என்றும் கலாநிதி வி.ஜனகன் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.